தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்ட் போட்டிகளில் இருந்து காயம் காரணமாக விலகுவதாக இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆன்டர்ஸன் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் பயணம் செய்து இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு டெஸ்ட் போட்டியில் வென்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கின்றன. இதில் 2-வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் விளையாடும் போது ஆன்டர்ஸனுக்கு அவரின் விலா எலும்பில் வலி ஏற்பட்டது. இருப்பினும் அதைச் சமாளித்துப் பந்துவீசினார். போட்டி முடிந்தபின் ஆன்டர்ஸன் கேப் டவுன் மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து பார்த்ததில் அவரின் மார்பு விலா எலும்பில் சிறு முறிவு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் சில வாரங்களுக்கு ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆஷஸ் தொடரின்போது கணுக்கால் காயத்தால் அவதிப்பட்ட ஆன்டர்ஸன் 5 மாத நீண்ட ஓய்வுக்குப்பின் தற்போது விளையாட வந்தார். ஆனால், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நிலையில் மீண்டும் காயத்தால் அணியில் இருந்து விலகியுள்ளார்.