இந்திய கிரிக்கெட் அணி மூன்று விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்க மேற்கு இந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி-20 மற்றும் ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், ஆகஸ்ட் 22-ஆம் தேதி தொடங்கும் 2 போட்டி களைக் கொண்ட டெஸ்ட் தொடருக்குத் தயாராகும் வகையில் இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றது. விண்டீஸ் “ஏ” அணிக்கெதிராக கூலிட்ஜ் மைதானத்தில் நடைபெற்ற 3 நாட்கள் கொண்ட இந்த பயிற்சி ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 297 எடுத்து டிக்ளர் செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய விண்டீஸ் “ஏ” அணி இஷாந்த் சர்மா (3 விக்.,) உமேஷ் யாதவ் (3 விக்.,), குல்தீப் யாதவ் (3 விக்.,) ஆகியோரின் அசத்தலான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்நிலையில் கடைசி நாளன்று (திங்களன்று) இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்து விண்டீஸ் “ஏ” அணிக்கு 305 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. தொடர்ந்து விளையாடிய விண்டீஸ் “ஏ” அணி 21 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டிரா செய்தது. பயிற்சி ஆட்டம் டிராவில் நிறைவடைந்த நிலையில், டெஸ்ட் தொடர் வரும் வியாழனன்று ஆன்டிகுவாவில் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.