பெங்களூரு
ஐபிஎல் தொடரின் 12-வது சீசனில் தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
புதனன்று நடைபெற்ற 42-லீக் ஆட்டத்தில் பெங்களூரு - பஞ்சாப் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4-வது வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த ஆட்டத்தின் கடைசி ஓவரில் பஞ்சாப் அணி வெற்றி பெற 27 ரன்கள் தேவைப்பட்டது. உமேஷ் யாதவ் வீசிய முதல் பந்தில் அஸ்வின் சிக்ஸர் அடித்தார்.இரண்டாவது பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்றார்.சிக்ஸர் நோக்கி சென்ற பந்தை கோலி கேட்ச் செய்தார்.
கேட்ச் செய்த கோலி, அஸ்வினை நோக்கி சைகை மூலம் ஏதோ கூறினார். இதனைக் கண்ட அஸ்வின் மிகவும் கோபத்துடன் வெளியேறினார். பெவிலியன் அருகே சென்ற போது தனது கையுறைகளை விசிறி எறிந்தார். போட்டி நிறைவடைந்தவுடன் இந்த விவகாரம் குறித்து அஸ்வின் கூறுகையில்,” நானும் கோலியும் கிரிக்கெட்டை அதிக விருப்பத்துடன் விளையாடுவோம்.அதனால் தான் இந்தச் சம்பவம் நடைபெற்றது” என்று கூறினார். போட்டியில் எந்த நிலை உருவானாலும் அமைதியாக இருக்கும் அஸ்வின், கோலியின் செயலால் கோபமடைந்தது விவாதப் பொருளாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.