tamilnadu

img

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்!

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 2024-ஆம் ஆண்டுக்கான வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணிகள் இன்று (டிசம்பர் 8) தொடங்கப்பட்டுள்ளன.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, மற்றும் உலாந்தி என நான்கு வனச்சரங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் யானை, புலி, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளும் அரியவகை பறவைகளும் வாழ்ந்து வருகின்றன. ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மாமிச உண்ணிகள் மற்றும் தாவர உண்ணிகள், அவற்றின் வாழ்வாதாரமான தாவரங்கள் மற்றும் நீர்நிலைகள் சிறப்பாக உள்ளதா என்பதை கண்டறிய ஒவ்வொரு ஆண்டும் மே மற்றும் டிசம்பர் மாதங்களில் கோடைகால மற்றும் குளிர்கால வனவிலங்கு கணக்கெடுப்புப்பணி நடைபெறும். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான குளிர்கால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி இன்று முதல் தொடங்கப்பட்டது. இந்த கணக்கெடுப்பு பணியானது எட்டு நாட்கள் நடைபெறும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நான்கு வனச்சரகங்களிலும் 64 நேர்கோட்டு பாதையில் வனத்துறையினர் குழுக்களாக பிரிந்து இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வனவிலங்குகளில் காலடித்தடம், எச்சம் மற்றும் வனவிலங்குகளை நேரில் பார்த்தும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு ஜிபிஎஸ் கருவிகள் மூலம் பதிவு செய்யப்படுகிறது.