கோயம்புத்தூர், ஜூன் 25- போதை ஆசாமியால் ஏற்பட்ட வாகன விபத்தில் உயிரிழந்த மனைவியின் சடலத்தோடு 4 மணி நேரத்துக்கும் மேலாக போராடி மதுக்கடையை மூடவைத்த பிரபல மருத்துவரின் துயரம் தோய்ந்த உணர்ச்சிப் போராட்டம் கோவையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையை அடுத்த கணுவாய் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். மருத்துவரான இவர் இயற்கை ஆர்வலரும் கூட. தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகக் குரல் கொடுத்து வருபவர். இவரது மனைவி ஷோபனா. இவர்களுக்கு சாந்திதேவி என்ற மகள் உள்ளார். இவர் ஆனைகட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் திங்களன்று மாலை பள்ளியிலிருந்து சாந்திதேவியை அழைத்து வருவதற்காக ரமேஷின் மனைவி ஷோபனா இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். மகளை அழைத்துக்கொண்டு ஜம்பு கண்டிக்கு அருகில் ஷோபனா வந்து கொண்டி ருந்தபோது, எதிர்த்திசையில் அதிவேகத்தில் வந்த இருசக்கர வாகனம் ஷோபனாவின் வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில், ஷோபனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். சாந்தி தேவி பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். இதுகுறித்த தகவலறிந்து அதிர்ச்சியுடன் சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர் ரமேஷ், உயிருக்குப் போராடிய தனது மகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மனைவியின் உடலைப் பார்த்து கதறி அழுதார். இதற்கிடையே ஷோபனாவின் வாக னத்தில் மோதிய ஆனைகட்டியைச் சேர்ந்த பாலாஜி என்பவர் குடிபோதையில் இருந்த தாகவும், போதைதான் இந்த விபத்துக்கு முக்கியக் காரணம் என்றும் தெரியவந்தது. இதையறிந்து அதிர்ச்சியும் கொதிப்பும் அடைந்த மருத்துவர் ரமேஷ், மனைவியின் சடலத்தோடு அந்தப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி சம்பவ இடத்திலேயே போராட்டத்தில் இறங்கினார். ஜம்புகண்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்துவிட்டு வருபவர்களால் அந்தப் பகுதியில் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நடக்கிறது எனக்கூறி அப்பகுதி மக்களும் மருத்துவர் ரமேசுக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்து கொண்டனர். டாஸ்மாக் மதுக்கடையை மூடும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டார் மருத்துவர் ரமேஷ். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த கோவை வடக்குப் பகுதி வட்டாட்சியர், துடியலூர் காவல் ஆய்வாளர் பாலமுரளி ஆகியோர் போராட்டம் நடத்திய ரமேஷிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதன்பின் டாஸ் மாக் கடையை தற்காலிகமாக மூட உத்தர விட்டதுடன், விபத்து ஏற்படுத்தி உயிரிழப்பு ஏற்படுத்தியவர்கள் மீது கடும் சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதன்பிறகே, தனது போராட்டத்தைக் கைவிட்டார் மருத்து வர் ரமேஷ். அவருடைய மகள் சாந்திதேவி கோவை யிலுள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், ஷோபனா மரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே செவ்வாயன்று சம்பந்தப் பட்ட மதுக்கடையை மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதையடுத்து கடை மூடப்பட்டது. (ந.நி.)