பெண்களுக்கு சீட் : காங்., பாஜகவின் நாடகம்!
கேரள சட்டமன்றத் தேர்தலில் “பெண் சக்தி” என்றும் “பெண்கள் முன்னேற்றம்” என்றும் வாய்கிழியப் பேசும் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளின் வேட்பாளர் பட்டியலும், பெண்களை எவ்வளவு தூரம் ஓரங்கட்டியுள்ளது என்பதைப் பார்த்தால் நகைப்புதான் வருகிறது. காங்கிரஸின் ‘92-ல் 9’ மேஜிக் 92 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, அதில் வெறும் 9 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பளித்துள்ளது. “ராகுல் காந்தி அவர்களே... இது அநியாயம் இல்லையா?” என அக்கட்சியின் பெண் தலைவரான ஷாமா முகமதுவே போர்க்கொடி தூக்கியுள்ளார். “திறமை இருந்தால் மட்டும் போதுமா? சீட் கிடைக்காதா?” என அவர் எழுப்பியுள்ள கேள்வி, காங்கிரஸின் ‘பெண்கள் இடஒதுக்கீடு’ முழக்கத்தைத் தெருவிற்கு இழுத்து வந்துள்ளது. கொச்சியில் நடந்த குளறுபடி கொச்சி தொகுதியில் போட்டியிடக் காத்திருந்த ஷாமா முகமதுவை ஓரங்கட்டிவிட்டு, எர்ணாகுளம் டிசிசி தலைவர் முகமது ஷியாஸிற்கு சீட் கொடுத்துள்ளது காங்கிரஸ் தலைமை. “நான் நிராகரிக்கப்பட்டிருக்கலாம், ஆனால் வீழ்த்தப்படவில்லை” என ஷாமா முகமது ஆதங்கத்தோடு பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இதேபோல் தீப்தி மேரி வர்க்கீஸ் போன்ற சீனியர் பெண் தலைவர்களும் ஓரங்கட்டப்பட்டுள்ளது, கேரளாவில் காங்கிரஸின் ஆணாதிக்க முகத்தை அப்பட்டமாகக் காட்டுகிறது. பாஜகவின் ‘புல்டோசர்’ கலாச்சாரம் பாஜகவும் இதற்கு விதிவிலக்கல்ல! எட்டுமானூர் தொகுதியில் போட்டியிட விரும்பிய அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.பி. சிந்துமோல், தனக்கு சீட் மறுக்கப்பட்டதைக் கண்டித்து தேசியத் தலைமைக்குப் புகார் அனுப்பியுள்ளார். அந்தத் தொகுதி ‘ட்வென்டி-20’ (Twenty20) என்ற கூட்டணிக் கட்சிக்குத் தாரைவார்க்கப்பட்டுள்ளது. “கூட்டணி தர்மம்” என்ற பெயரில் சொந்தக் கட்சிப் பெண் தலைவர்களையே புறக்கணிப்பதுதான் பாஜகவின் பாணியாக உள்ளது. பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு பற்றிப் பேசும் இவர்களுக்கு, வேட்பாளர் பட்டியலில் 10% கூட ஒதுக்க மனமில்லை. இடதுசாரிகள் 12 பெண் சிங்கங்களை ஒரே அடியில் களமிறக்கியுள்ள நிலையில், காங்கிரஸ் - பாஜக கட்சிகள் இன்னும் ‘சகுனம்’ பார்த்துக் கொண்டிருக்கின்றன. இவர்களின் கபட நாடகத்தைக் கேரள மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்!