கோவை, ஏப்.6-
ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்களுக்கு முழுமையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்கிற அரசு அறிவிப்பில் தெளிவு இல்லாததால் பல இடங்களில் தொழிலாளர்களின் ஊதியம் மறுக்கப்படும் நிலை இருப்பதால், இதுகுறித்து தமிழக முதல்வர், தொழிலாளர் துறை உடனடியாக அரசாணை வழங்குவதோடு தொடர் கண்காணிப்பும் செலுத்திட வேண்டும் என பி.ஆர்.நடராஜன் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த இரண்டு வார காலமாக மக்கள் ஆதரவுடன் நடந்து வரும் ஊரடங்கு பெருமளவு சமூக பரவலை தடுக்கும் என்று தங்களைப் போலவே நானும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். இந்த கடுமையான சூழ்நிலையிலும் கீழ்காணும் பிரச்சனைகளை தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். கோவை மாவட்டத்தில் அணி திரட்டப்பட்ட இன்ஜினியரிங் பஞ்சாலைத் தொழில்களில் பல்லாயிரக்கணக்கானோர் வேலை செய்து வருகின்றனர்.
இத்தொழிலாளர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முழுமையான ஊதியம் வழங்குவதற்கு மாறாக பாதி ஊதியம் தரப்படுகிறது. சில நிறுவனங்கள் அதுவும் தராமல் உள்ளது. இது தொழிலாளர்கள் மத்தியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய தொழிலாளர்களுக்கு முழுமையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்கிற அரசு அறிவிப்பில் தெளிவு இல்லாததால் இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளதாக கருதுகிறேன். எனவே இதுகுறித்து தொழிலாளர் துறை உடனடியாக அரசாணை வழங்குவதோடு தொடர் கண்காணிப்பும் செலுத்திட வேண்டுகிறேன்.
பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிடுக
இதேபோல் கோவை மாவட்டம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் முழுமையாக வழங்கப்படவில்லை. குறிப்பாக கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. எனவே கூடுதல் கவனம் எடுத்து தூய்மை தொழிலாளர்களுக்கு நோய்த்தொற்று சோதனை நடத்துவதுடன் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை உடனடியாக வழங்க வேண்டுகிறேன்.
கோவை மாவட்டம் முழுவதும் லட்சத்திற்கும் மேற்பட்ட உடல் உழைப்பு தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்தும், பதிவு செய்யாமலும் இருக்கிறார்கள். சில வாரியங்களில் பணமே கிடையாது. எனவே, வேலையின்றி தவிக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் தமிழக அரசு அறிவித்துள்ள பண உதவி மற்றும் உணவுப் பொருட்களையும் வழங்குவதை உறுதிப்படுத்திட வேண்டும்.
இஎஸ்ஐ மருத்துவமனை மேம்பாடு
கோவை இஎஸ்ஐ மருத்துவமனை கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. நானும் எங்கள் கட்சியின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் நிதியை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு வழங்கியுள்ளேன். இருந்தபோதும் இஎஸ்ஐ மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதில் பெரும் குறைபாடு தெரிகிறது. மேலும், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் வார்டுக்குள் பணியாற்றும் சுகாதார பணியாளர்களின் தங்குமிடம் என்பது உறுதியாக அறிவிக்கப்பட்டதாக தெரியவில்லை. அவர்கள் வீட்டிற்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. இது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பாதிக்கும். ஆகவே இவர்கள் பணி ஓய்வு நேரத்தில் தங்கி ஓய்வு எடுப்பதற்கான இடம் ஏற்பாடு செய்திட கவனம் செலுத்த வேண்டும்.
கோவை விமான நிலையத்தில் உள்ள தீயணைப்பு வாகனம் மிகவும் நவீனப்படுத்தப்பட்டது. இதனை கிருமிநாசினி தெளிப்பதற்கு வஜ்ரா வாகனத்தை போல பயன்படுத்துவதற்கு உதவி புரியும் ஆகவே இதனை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவசர அவசியமான இத்தேவைகளை தமிழக முதல்வர் அவர்கள், எனது கருத்துகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பி.ஆர்.நடராஜன் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். மேலும், இக்கோரிக்கையை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணிக்கும் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.