tamilnadu

img

மண்ணில் சொர்க்கத்தை உருவாக்க போராடுபவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்.... தோழர் பி.ரவிச்சந்திரன் படத்திறப்பு நிகழ்வில் மதுக்கூர் ராமலிங்கம் பேச்சு....

கோவை:
மனிதகுலம் விடுதலை பெற வேண்டும். மண்ணிலே சொர்க்கத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக போராடிக்கொண்டிருப்பவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் என்று தோழர் பி.ரவிச்சந்திரன் படத்திறப்பு புகழஞ்சலி கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட மதுக்கரை ஒன்றியச் செயலாளராகவும், மாவட்டக் குழு உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றியவர் பி.ரவிச்சந்திரன். கடந்த மே மாதம் உடல்நிலை பாதிப்படைந்து காலமானார். அவரது படத்திறப்பு மற்றும் புகழஞ்சலி நிகழ்ச்சி ஞாயிறன்று கோவை வெள்ளளூரில் நடைபெற்றது. கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் வி.இராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கருப்பையா வரவேற்றார். இதில் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் -கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் ஆகியோர் பி.ரவிச்சந்திரன் உருவப்படத்தை திறந்துவைத்து புகழஞ்சலி செலுத்தினர்.

 நிகழ்ச்சியில் மதுக்கூர் ராமலிங்கம் பேசுகையில், கோவை வெள்ளளூர் சுதந்திரப்போராட்டத்தில்  அதிக தியாகிகள் பங்கேற்ற பெருமை கொண்ட ஊர் .இறந்தபிறகு ஆன்மா வாழும், சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்கிற வதந்திகளை கம்யூனிஸ்ட்டுகள் நம்புவதில்லை. மாறாக நாம் வாழும் காலத்திலேயே இந்த மண்ணிலேயே சொர்க்கத்தை உருவாக்க வேண்டும் என்கிற உந்துதலோடு போராடிக்கொண்டிருப்பவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். பாசிஸ்ட்டுகள் அரியணையில் அமர்ந்துள்ள இந்த காலம் உழைக்கும் மக்களுக்கு சவாலான காலமாக உள்ளது.  ஏழை எளிய மக்களின் மீது தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனை எதிர்த்து கம்யூனிஸ்ட்டுகள் நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் போராடிக்கொண்டே இருக்கிறோம். இந்த கொரோனா காலத்தில்கூட பெண்கள்,குழந்தைகள் மீதான வன்கொடுமை தாக்குதல் அதிகரித்து வருவதை கவலையோடு பார்க்கிறோம். கோவை அன்னூர் ஒட்டர்பாளையத்தில் விஏஓ அலுவலக உதவியாளரை  சாதி ஆதிக்க சக்தியினரின் காலில் விழவைத்து மன்னிப்புக் கேட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. மறுபுறம் ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி பெண்கள் அணியில் தலித் வீராங்கனை பங்கேற்றதை பொறுக்க முடியாமல், ஒரு கூட்டம் சாதி வெறியை வெளிப்படுத்துகிறது.

இத்தகைய சமூகத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இத்தகைய அவலத்தை போக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடிக்கொண்டிருப்பவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். அத்தகைய உன்னதமான பணியை மேற்கொண்டவர் தோழர் ரவிச்சந்திரன். ஆகவே தான் ரவிச்சந்திரனின் இழப்பு அவரது  குடும்பத்தினரின் இழப்பு என்றில்லாமல் ஊரின் இழப்பாக, கம்யூனிஸ்ட்டுகளின் இழப்பாக பார்க்கப்படுகிறது. ரவிச்சந்திரன் மறைந்தாலும் அவர் முன்னெடுத்த லட்சியத்தை வென்றெடுக்க நாம் தொடர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும். அதுவே மறைந்த தோழர் ரவிச்சந்திரனுக்கு நாம் செலுத்தும் உண்மையான புகழஞ்சலியாக இருக்கும் என்று கூறினார்.முன்னதாக பி.ரவிச்சந்திரனின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு நிதியாக ரூ 2.5 லட்சம் வழங்கப்பட்டது. ரவிச்சந்திரன் சிகிச்சைக்காக செலவு செய்த மருத்துவ செலவை கட்சி ஏற்றுக்கொள்ளும் என தலைவர்கள் தெரிவித்தனர்.இந்நிகழ்வில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கே.மனோகரன், மூத்த தோழர்கள் என்.வி.தாமோதரன், எஸ்.ஆறுமுகம் மற்றும் நாகேந்திரன், எம்.சுப்பிரமணி, பஞ்சலிங்கம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.  விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் வி.பி.இளங்கோவன் நன்றி கூறினார்.