tamilnadu

img

கோவை சிறுமி பாலியல் வன்கொலை

கோயம்புத்தூர், மார்ச் 31-


கோவையில் 6 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தோஷ்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த நபர், இந்துத்துவா மதவெறி பின்புலம் கொண்ட பாரத் சேனா என்ற அமைப்பின் நிர்வாகியாக இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த வழக்கில், கொல்லப்பட்ட சிறுமி, கும்பல் பாலியல் வன்கொலை செய்யப்பட்டுள்ளார். ஆனால் ஒரு நபரை மட்டும் கைது செய்துள்ள நிலையில் மற்றவர்களை தப்பவிடும் முயற்சி நடப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இதன் பின்புலத்தில் உள்ள அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.கோவை மாவட்டம், துடியலூர் பன்னிமடையில் கடந்த வாரம் 6 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சிறுமியின் பெற்றோர், மாதர் சங்கத்தினர் உள்ளிட்டோர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து சிறுமி கொலை சம்பந்தமாக 10 தனிப்படை அமைத்து குற்ற வாளிகளை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் இந்த பாலியல் வன்கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தோஷ்குமார் என்பவரை காவல்துறையினர் ஞாயிறன்று கைது செய்தனர்.


 தொண்டாமுத்தூர் உலியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தனது பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார். இவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும், கடந்த மார்ச் 25ஆம் தேதியன்று சிறுமியை அருகில் இருந்த தனது பாட்டி வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும், அப்போது சிறுமி கூச்சலிடவே, அவரின் வாயை பொத்தி, கழுத்தை துண்டால் இறுக்கியதாகவும். இதில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த தாகவும் சந்தோஷ்குமார் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.மேலும், இந்த சம்பவம் நடைபெற்ற தினத்தில் அவரது பாட்டி அய்யம்மாள் உயிரிழந்தநிலையில், அதனை சாதகமாக பயன்படுத்தி கொலையை மறைத்து நாடகமாடியதும் காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதேநேரம், சிறுமி கொலை செய்யப்பட்ட அன்றைய தினமே அவரின் பாட்டி உயிரிழந்திருப்பது காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, அது குறித்தும் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேற்படி சந்தோஷ்குமார், இந்துத்துவா மதவெறி பின்புலம் கொண்ட பாரத் சேனா என்ற அமைப்பின் நிர்வாகியாக செயல்பட்டு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கும்பல் பாலியல் வன்கொலைசிறுமி பாலியல் வன்கொலை செய்யப்பட்டகொடிய சம்பவம், ஒரு தனிநபர் சம்பந்தப் பட்டது மட்டுமல்ல; அவர் கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார் என்பதை ஏற்கெனவே காவல்துறை தனது முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்துள்ளது. குழந்தை யின் வாய், மூக்கில் துணி வைத்து இறுக்கமாக மூடப்பட்ட தகவலும் வெளியாகியுள்ளது. இதை தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தனது இணையதளத்தில் பதிவிட்டு உறுதி செய்துள்ளது. அதுமட்டுமல்ல, குழந்தையின் உடற்கூராய்வு அறிக்கையிலும், கும்பல் பாலியல்வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.ஆனால், இத்தகைய கடுமையான வழக்கில் சந்தோஷ்குமார் என்ற ஒரு நபரை மட்டும் கைது செய்து, வழக்கை மூடுவதற்குமுயற்சி நடக்கிறதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனவே இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும், இதற்கு பின்புலமாக இருந்த சக்திகளையும் அடையாளம் கண்டு கைது செய்து கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.