tamilnadu

img

காலத்தை வென்றவர்கள்...

சின்னியம்பாளையம் தியாகிகளுக்கு செவ்வணக்கம்

74 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஜனவரி 8 ல் சின்னியம்பாளையம் தியாகிகளின் நினைவிடத்திற்கு புகழஞ்சலி செலுத்திட வருடம் தோறும் ஆயிரமாய் திரள்வோரில் 10 சதவிகிதத்தினர் கூட இத்தியாகிகள் மூலதனத்தின் ஆதிக்கத்திற்கெதிராக முஷ்டி உயர்த்திய போது பிறந்திருக்க மாட்டார்கள். மறைந்தவர்கள் உறவுமில்லை, நட்பும் இல்லை. ஆனாலும் நினைவு அஞ்சலி 74 ஆண்டுகளாகத் தொடர்கிறது. சின்னையன்,ரங்கசாமி, ராமையன், வெங்கடாசலம் ஆகியோர் நால்வர் உழைக்கும் வர்க்கத்திற்காக செய்த அளப்பரிய பங்களிப்பு அந்த மண்ணையே தியாக பூமியாகிவிட்டது. நால்வருக்கும் தூக்குதண்டனை உறுதியான பின்பு சிறைத்துறை அவர்களது கடைசி ஆசை என்ன என்று கேட்டது. தூக்குமேடைத் தியாகிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்கள் பி.ராமமூர்த்தி, கே.ரமணியைப் பார்க்க வேண்டும். சிறை உடைகளோடு செவ்வணக்கம் செலுத்தும் போட்டோ எடுக்க வேண்டும். எங்கள் நால்வரையும் தொழிலாளிகளின் ஒற்றுமைக்கு அடையாளமாக ஒரே குழியில் புதைக்க வேண்டும் என்று சொன்னார்கள். தலைவர்கள் கண்டார்கள்; கலங்கினார்கள். தியாகிகளே சிரித்த முகத்தோடு உழைக்கும் வர்க்கத்தை அணிதிரட்டுங்கள். சுரண்டல் சமூகத்திற்கு முடிவு கட்டுங்கள் என்று சொல்லி இறுதி வார்த்தைகளை உதிர்த்தனர்.  உலகின் அதிசயமாக சிறையுடையில் சிறைக் கூடத்தில் செவ்வணக்கத்துடன்(லால்சலாம்) புகைப்படம் எடுக்கப்பட்டது. மூன்று ஆசைகளும் நிறைவேற்றப்பட்டது. பல்லாயிரவர் பங்கேற்க இறுதி நிகழ்ச்சிகளும் நடத்தி முடிக்கப்பட்டது.