tamilnadu

img

நவயுகம் படைக்கிறது சிவப்புச் சீனம்

சீன ஜனாதிபதி தோழர் ஜீ ஜின்பிங்  தமிழகம் வருகை - சிறப்புப் பதிவு

“செவ்வணக்கம், தோழர்களே!”
“உங்களது கடின உழைப்புக்காக தேசம் நன்றி கூறுகிறது, தோழர்களே!”
- சேர்மன் முழங்கினார்.
வீரர்கள் பதில் வணக்கம் செலுத்தினர்.
“வணக்கம் தோழர் சேர்மன் அவர்களே!”

 

“மக்களுக்காக பணி செய்வோம்! கட்சியைப்  பின்பற்றுவோம்! வெற்றியை ஈட்டுவோம்! மிக உயரிய ஒழுக்க நெறியுடன் முன்செல்வோம்!”

- உலகில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு,  அனைத்தும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 580 வகையான ஆயுதத் தளவாடங்களுடன் அந்த பிரம்மாண்டமான - வரலாற்று சிறப்புமிக்க மைதானத்தில் அணிவகுத்த வீரர்கள், எங்களது தேசத்தின் நலன் காக்க கட்சி என்ன முடிவெடுக்கிறதோ அதை அமல்படுத்துவோம் என்று சேர்மன் முன்பும் கூடியிருந்த லட்சக் கணக்கான மக்கள் முன்பும்  உறுதியேற்றனர். 20 லட்சம் வீரர்கள் கொண்ட மக்கள் விடுதலை ராணுவத்தினர் முதன்மை வீரர்கள் ஆவர்கள். அணி வகுத்த தளவாடங்களில் 40 சதவீதம், இப் போதுதான் உலகின் பார்வைக்கு காண்பிக்கப் படுகின்றன. பெய்ஜிங் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள தியானென்மென் சதுக்கம் அது.  சேர்மன் ஜீ ஜின் பிங் கம்பீரமாக அவர்களுக்கு செவ்வணக்கம் செலுத்திக் கொண்டிருந்தார். அவர்களது அணிவகுப்பை, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறை யிலும் சீன மத்திய ராணுவ கமிஷனின் தலை வர் (சேர்மன்) என்ற முறையிலும் சீன மக்கள் குடி யரசின் ஜனாதிபதி என்ற முறையிலும் ஏற்றுக் கொண்டு அவர்களிடையே உரையாற்றுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார்.

சேர்மன் மாவோ என்ற புகழ்மிக்க பெயரி னைக் கொண்ட நவ சீனத்தின் மகத்தான புரட்சித் தலைவர் தோழர் மா சே துங், 1949 அக்டோபர் 1 அன்று பெய்ஜிங்கில் ஏற்றிய அந்த  மகத் தான செங்கொடியை, 2019  அக்டோபர் 1 அன்று, மக்கள் சீனத்தின் மிகப்பிரம்மாண்டமான 70ஆம் ஆண்டு விழாவில், உலகின் எதிர்காலம் சோசலிசமே என்பதைப் பறைசாற்றும் வகையில் விண்ணதிரும் முழக்கங்களுக்கிடையே,70 குண்டுகள் முழங்க  ஏற்றி வைத்தார் சேர்மன் ஜீ ஜின் பிங். அவரது இருபுறமும் சீனக் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களுமான லீ கே கியாங், லீ ஷான் சூ, வாங் யாங், வாங் ஹூனிங், ஜாவோ லெஜி, ஹன் ஜெங், வாங் கிஷான் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் ஜியாங் ஜெமின்,  ஹூ ஜிண்டாவோ ஆகிய தலைவர்கள், இப்பூவுலகமே வியந்து  பார்க்கும் ஒரு மகத்தான தேசத்தை - ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்ற பெருமிதத்துடன் அணிவகுப்பை பார்வை யிட்டார்கள். தியானென்மென் சதுக்கத்தின் நாலா புறமும் செங்கடலாக காட்சியளித்தது. 2லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்தனர். அந்த மக்களி டையே உரையாற்றிய ஜனாதிபதி ஜீ ஜின் பிங், பழைய சீனம் அனுபவித்த மிகக் கொடூரமான துயரங்களையெல்லாம் முற்றாக  துடைத்தெறிந்து நவசீனத்தை படைத்திருக் கிறோம் என்று பெருமிதத்துடன் கூறினார். சீன மக்கள் குடியரசு 1949ல் பிறக்கும் போது வறுமை தோய்ந்திருந்தது; பலவீனமான ஒரு குழந்தை யாக இருந்தது. அன்றைய நவீன காலத்துடன் ஒப்பிடும் போது, சீனா நூறாண்டுகளுக்கும் மேல் பின்தங்கியிருந்தது. ஆனால் கடந்த 70 ஆண்டுகளில் உலகையே வியக்க வைக்கும் அளவிற்கு அளப்பரிய சாதனைகளை சீனா படைத்திருக்கிறது. அந்தச் சாதனையின் நாயகர்கள் சீன தேசத்தின் மக்களே என்று ஜீ  கம்பீரத்துடன் முழங்கினார். 

உண்மையிலேயே சீன மக்கள் குடியரசு என்ற சோசலிச நாடு பிறந்த போது ஏதுமற்ற பொருளாதாரமாக இருந்தது; தீப்பெட்டி களையும் மண்ணெண்ணெய்யையும் கூட  இறக்குமதி செய்ய வேண்டிய அவலத்தில் இருந்தது; அத்தகைய வறுமைப் பொருளா தாரம், இன்று உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக, அமெரிக்கா உள்ளிட்ட முதலாளித்துவ நாடுகளின் நகர்வுகளைக் கூட தீர்மானிக்கிற மையமான பொருளாதாரமாக மாறியிருக்கிறது என்றால், சீனா பின்பற்றி வரும் சோசலிசப் பொருளாதார கொள்கைதான் அடிப்படைக் காரணம்; அந்தப் பாதையில் சீன மக்களும் தேசமும் முன்னேறிச் செல்வதை எவராலும் தடுக்க முடியாது; உலக அரங்கில் சீனாவின் அந்தஸ்தை எந்தவொரு சக்தியாலும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது என்று பெருமிதம் பொங்க எழுச்சி உரையாற்றினார் ஜீ. ஜீயின் உரை முடிந்தவுடன் 70ஆயிரம் புறாக்களும், 70ஆயிரம் பலூன்களும் வானத்தில் பறக்கவிடப்பட்டன. சமாதானம் என்றால் சிவப்பு, சிவப்பு என்றால் சமாதானம் என்று சொல்லாமல் சொல்லின பெய்ஜிங் நகரத்தின் வான்வெளியை நிறைத்த வெள்ளைப் புறாக்களும் சிவப்பு பலூன்களும். அந்த தருணத்தில் விழா மேடையிலிருந்து அறிவிப்பாளர் வர்ணனையுடன் குறிப்பிட்டார்: “சீன சோசலிசம் புதிய சகாப்தத்திற்குள் நுழைகிறது. சீன தேசம் மிகவும் வளமிக்க நாடாக  வளர்ந்து கொண்டிருப்பதிலிருந்து மிகவும் வலுமிக்க நாடு என்ற இடத்தை நோக்கி நகர்கிறது”.

அந்த வேளை சீனாவின் மிகப்பிரம்மாண்ட மான ஸ்மார்ட் போன்  நிறுவனமான ஜியோமி யின் நிறுவனரும் தலைவருமான லீ  ஜும் வொய்போ சமூக ஊடகத்தில் எழுதினார் : “சோசலிச சீனம் தொழில்நுட்பத் துறையில்  மிகப் பிரம்மாண்டமான வளர்ச்சியை எட்டி யிருக்கிறது. தனியார் தொழில் முனைவோர் களாகிய நாங்கள், உள்நாட்டைச் சேர்ந்த வர்கள், எங்கள் தாய் நாட்டிலேயே வளர்ந்த வர்கள், எங்கள் நாட்டிலேயே படித்து சொந்தத் தொழில்நுட்பங்களை உருவாக்கி இந்த வளர்ச்சியை உள்நாட்டிலேயே எட்டி யிருக்கிறோம். சீன மக்கள் குடியரசின் எண்ண ற்ற சாதனைகளில் இது முக்கியமானது”.  சீன குணாம்சத்துடன் கூடிய சோசலிசம் என்ற பாதையில் நடைபோடத் துவங்கிய மக்கள் சீனம், 1949க்கு முன்பு நடைமுறை யில் இருந்த அரை காலனி ஆதிக்க - அரை நிலப்பிரபுத்துவ ஆட்சியை தூக்கியெறி வதற்காக 28 ஆண்டு காலம் ரத்தம் தோய்ந்த பேரெழுச்சியைக் கண்டது. மாபெரும் தலை வர் மா சே துங் தலைமையில் நடைபெற்ற வரலாற்றுப் புகழ்மிக்க நெடும் பயணத்தின் முத்தாய்ப்பாக சீனப் புரட்சி, சீன மக்கள் குடியரசு எனும் சோசலிச நாடு உதயமாக வழி வகுத்தது. கடந்த காலம் ஏற்படுத்திய ரணங் களை ஆற்றிய பிறகு, சேர்மன் டெங் சியோ பிங் தலைமையில் சீர்திருத்தம் என்ற புதிய நடைமுறைகளை சீன கம்யூனிஸ்ட் கட்சி அமல்படுத்தியது. அதன் பிறகு சீனா உலக அரங்கில் பல அதிசயங்களை நிகழ்த்தியது. 

அதற்கு முன்பு மனித குலத்தின் வர லாற்றிலேயே இல்லாத அளவிற்கு எல்லா துறைகளிலும் சாதனைகளைப் படைத்தது சோவியத் ஒன்றியம். அத்தகைய சோவியத்தின் பின்னடைவால், உலகில் சோசலிசம் மாண்டுவிட்டது என்று கெக்கலி கொட்டிச் சிரித்த முதலாளித்துவ ஊதுகுழல்களுக்கு சம்மட்டி அடி கொடுத்தது  மக்கள் சீனத்தின் அதிரடி வளர்ச்சி. முதலாளித்துவ உலகில் சீனாவைப் பற்றி எத்தனை எத்தனை அவதூறுகளைப் பரப்பினா லும், அவற்றைப் பற்றி சீன மக்கள் கவலைப்படுவ தில்லை. ஏனென்றால், 70 ஆண்டு கால ஆட்சி யில் சீன கம்யூனிஸ்ட் கட்சி சோசலிசத்தை அமலாக்குவதில் புதிய உச்சத்தை எட்டி யிருக்கிறது. 2600 ஆண்டுகளுக்கு மேலாக சுரண்டலின் பிடியில், வரிக் கொடுமைகளின் பிடியில் சிக்கியிருந்த விவசாயிகளை ஒட்டு மொத்தமாக விடுதலை செய்தது சீன கம்யூ னிஸ்ட் கட்சி. நவசீனத்தில் விவசாயத்தின் மீது வரி இல்லை. மக்களே மன்னர்களாக இருக்கிற ஒரு அரசியல் கட்டமைப்பு செதுக்கப்பட்டி ருக்கிறது. சுமார் 140 கோடி மக்கள் வாழும் தேசம் வயிறாற சாப்பிடுகிறது. வறுமை துடைத் தெறியப்பட்டிருக்கிறது. 

1952ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2018ஆம் ஆண்டு சீனாவின் மொத்த உள்நாட்டு  உற்பத்தி (ஜிடிபி) 174 மடங்கு அதிகரித்துள்ளது. 1952ல் 67.9 பில்லியன் யுவானாக இருந்த ஜிடிபி, 2018ல் 90 டிரில்லியன் யுவானாக அதிகரித் துள்ளது. இதை கணக்கிட்டு பார்க்கும் போது சீனாவின் தனிநபர் உள்நாட்டு உற்பத்தி யானது வெறும் 119 யுவானிலிருந்து 64,600 யுவானாக அதிகரித்துள்ளது. இது 70 மடங்கு அதிகமாகும்.  உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளா தாரமாக, உலகின் முதல் மிகப் பெரிய வர்த்தக ராக, உலகில் மிக அதிகமான அந்நிய செலாவணி கையிருப்பு வைத்துள்ள நாடாக, உலகிலேயே மிக நீளமான - அதிவேக போக்கு வரத்து வசதிகளை கொண்ட, உலகிலேயே மிகப்  பெரிய வங்கிக் கட்டமைப்பைக் கொண்ட மாபெரும் தேசமாக எழுபதே ஆண்டுகளில் வளர்ந்து நிற்கிறது மக்கள் சீனம். ஒவ்வொரு நாளும் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 246 பில்லியன் யுவான்  அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் 12.6 பில்லியன் டாலர் அளவிற்கு பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் அதிகரிக்கிறது. ஒவ்வொரு நாளும் சீனா விலிருந்து 140 பில்லியன் பார்சல்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் 76 ஆயிரம் வாகனங்கள் உற்பத்தி அதிகரிக்கிறது. 

இவை பிற நாடுகளால் - அமெரிக்கா உள்ளிட்ட முதலாளித்துவ நாடுகளாலும் கூட கற்பனை செய்ய முடியாத பிரம்மாண்டம்.  உலகப் பொருளாதாரத்தில் உண்மை யிலேயே மிக மிக வெற்றிகரமான ஒரு கதை இருக்குமென்றால் அது சீனாவின் கதை தான் என்று அமெரிக்கப் பொருளாதார வல்லுநர் ஜெப்ரி சாக்ஸ் வர்ணிக்கிறார்.  இந்த மாபெரும் வளர்ச்சிக்கு அடிப்படை, சீன கம்யூனிஸ்ட் கட்சி, அந்த தேசத்தின் இளைஞர் களை முன்னிறுத்தியதுதான். தேசத்தின் நம்பிக்கையே இளைஞர்கள்தான் என்றும், நமது  முன்னோர்களின் உறுதிப்பாட்டையும் போராட்டக் குணத்தையும் தேசிய மறுமலர்ச்சி யையும் உயிர்ப்புடன் வைத்திருப்பவர்கள் இளைஞர்கள்தான் என்பதிலும் உறுதியாக இருக்கிறது சீன கம்யூனிஸ்ட் கட்சி. 

உலகப் பொருளாதாரத்திற்கு 30 சதவீதம் சீனா பங்களிப்பு செய்கிறது. அதனால்தான் உலகப் பொருளாதாரம் இன்னும் உயிரோடு இருக்கிறது. உலகப் பொருளாதாரத்தின் முதன்மையான ஸ்டெபிலைசர் (நிலையாக வைத்திருக்க உதவும் கருவி) சீனா என்று முதலாளித்துவ பொருளாதார வல்லுநர்களே ஒப்புக் கொள்கின்றனர்.  பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, அரசியல், சமூக வளர்ச்சியிலும் உயர்ந்த இடத்தை எட்டியுள்ளது மக்கள் சீனம். ‘ஒரே நாடு, இரண்டு அரசமைப்புகள்’ என்ற உயரிய  கோட்பாட்டை அமல்படுத்துகிற ஒரு நாடு உலகில் உண்டு என்றால் அது மக்கள் சீனம்தான். சீனாவில் ஒருபகுதியான ஹாங்காங்கில் அம்மக்கள் விரும்புகிற வடிவத்திலான ஆட்சி நடக்கிறது. சீனாவின் ஒரு பகுதியான மக்காவ்வில் அம்மக்கள் விரும்புகிற முறையிலான ஆட்சி நடக்கிறது.  பல்வேறு இனங்கள், நாகரிகங்கள் என வாழ்கிற மக்க ளுக்கு அவரவருக்குரிய சுயாட்சி  உரிமையை  உறுதி செய்திருக்கிறது மக்கள்சீனம். அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சுயாட்சிக் கவுன்சில்களே அம்மக்களை நிர்வகிக்கின்றன. எங்கெங்கு காணினும் பசுமை, எங்கு நோக்கினும் புதுமை. அத்தனையையும் படைத்தது சிவப்பின் மேன்மை.  

- எஸ்.பி.ராஜேந்திரன்