tamilnadu

கிடப்பில் போடப்பட்ட மின் மயானம் கட்டக்கோரி பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

திருப்பூர், ஏப். 8-பல்லடத்தில் மின் மயானம் அமைக்கும் பணியை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில் மின்மயானம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்தது. இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொள்ளாச்சி சாலை வெங்கிட்டாபுரத்தில் மின் மயானம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதையடுத்து பல்லடத்தைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் மின்மயானம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் பல மாதங்கள் ஆகியும் இந்த மின்மயான கட்டுமானப்பணி தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்புத் தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருப்பதுடன், பல்லடம் வட்டார வளர்ச்சித் துறையும் இதற்கு உடந்தை என்று கூறப்படுகிறது.இந்நிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ள மின் மயானக் கட்டுமானப் பணியை உடனடியாக தொடங்க வலியுறுத்தி திங்களன்று பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தை வியாபாரிகள் சங்கம், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு முற்றுகையிட்டனர். இதனைத்தொடர்ந்து வட்டாட்சியர் சாந்தியிடம் நூற்றுக்கணக்கான மனுக்களைக் கொடுத்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களின் பத்தாண்டு கால கோரிக்கையான மின்மயானத்தை உடனடியாக அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனியும் காலதாமதம் செய்தால்நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பது உள்ளிட்ட பல கட்டப் போராட்டங்களில் ஈடுபட இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்தனர்.