கோவை, ஏப்.1-சிறுமி பாலியல் வன்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளியுடன் இணைத்து அவதூறு பதிவுகளை வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திடக்கோரி மாவட்ட தேர்தல் அலுவலர், காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதி சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனின் முதன்மை முகவர் சி.பத்மநாபன் திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல்அலுவலருமான கு.ராசாமணியிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, கோவை பன்னிமடை பகுதியில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தோஷ்குமார்என்பரை காவல்துறை கைது செய்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து உதயகுமார் ராஜன் என்பவர் தனது முகநூல் பதிவில் மேற்படி குற்றவாளியையும், மார்க்சிஸ்ட் கட்சியையும், எங்கள் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனையும் மற்றும் தேர்தல் சின்னத்தையும் இணைத்து பதிவிட்டுள்ளார்.இது எங்கள் கட்சி மற்றும் வேட்பாளரின் கண்ணியத்தை சீர்குலைக்கும் விதத்தில் வேண்டுமென்றே திட்டமிட்டு செய்யப்பட்டுள்ள அவதூறு பதிவுகளாகும். சிறிதும் உண்மையற்ற செய்தியை தவறான நோக்கத்துடன் திட்டமிட்டு பதிவு செய்துள்ள உதயகுமார் ராஜன் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெயரை பொதுவெளியில் வெளியிட்டமைக்காகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த புகார்மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வாலிபர் சங்கம் புகார்
இதேபோல், கோவை மாநகர காவல்துணை ஆணையரிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மாவட்டச் செயலாளர் கே.எஸ்.கனகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் புகார் மனுஅளித்துள்ளனர். இதில் சிறுமி பாலியல் வன்கொலை குற்றவாளியுடன் தங்களது அமைப்பை தொடர்புபடுத்தி முகநூலில் அவதூறு பதிவுசெய்த இந்துமுன்னணி ஜெய்கார்த்தி மற்றும் பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த உதயகுமார் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், வாலிபர் சங்கத்தின் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியக் குழுவின் சார்பில் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பலருக்கு தொடர்பு
இதற்கிடையே, சிறுமி பாலியல் வன்கொலை வழக்கில் தனதுமகன் திட்டமிட்டு சிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கொலையில் மேலும் பலருக்கும் தொடர்ப்புஇருப்பதாக சந்தோஷ்குமாரின் தந்தை கனகராஜ் தெரிவித்துள்ளார். மேலும், தனது மகன் வாலிபர் சங்கம், கம்யூனிஸ்ட் கட்சிகளில் உறுப்பினராக இருந்ததுஇல்லை என்றும், சிலர் அரசியலுக்காக அவ்வாறு பரப்பி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.