சேலம், மே 13-சேலத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்கக்கோரி மூணாங்கரடு பகுதி மக்கள் திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அரசு நிலத்தில் குடிசை அமைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சேலம் மாநகராட்சி 58 வதுகோட்டத்திற்கு உட்பட்ட முணாங்கரடு கொத்தடிமை காலனி பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கூலி தொழிலில் ஈடுபட்டு வரும் இவர்கள் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிடக்கோரி, சேலம் மாவட்டநிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனால் இது குறித்து மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை.இந்நிலையில், இந்த பகுதியில் மாநகராட்சி இயற்கை உரம் தயாரிக்கும் குடோன் அமைக்க முயற்சி மேற்கொண்டது. இதனால் ஆவேசமடைந்த அந்த பகுதி மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொத்தடிமை காலனி அருகே உள்ள தெற்கு மூணாங்கரடு பகுதியில் மலை அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் குடிசைகள் அமைத்து வீட்டுமனைக்கான நிலத்தை பிடித்தனர்.சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்களது குடும்பத்தோடு, அரசு புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்தது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர்சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதுவீட்டுமனை பட்டா கேட்டு இதுவரைவிண்ணப்பிக்கவே இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்ததால் ஆவேசமடைந்த பொது மக்கள் அவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வீட்டுமனை பிரச்சனை தொடர்பாக மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்குமாறும், அதன்பின் அவ்விடத்தில் வீட்டுமனை வழங்குவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியினர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.முன்னதாக, இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன், மாநகர கிழக்கு செயலாளர் பி.ரமணி, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பி.கணேசன், மாநகர கிழக்கு செயலாளர் பெரியசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.