tamilnadu

img

விவசாயிகள் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி நகை மதிப்பீட்டாளரின் மோசடிக்கு துணைபோகும் காவல் துறை

கோவை, மே 11-அன்னூர் சிண்டிகேட் வங்கியில் விவசாயிகள் கணக்கில் போலி நகை வைத்து 10 லட்சரூபாய்க்கு மேல் மோசடி செய்யப்பட்டு சம்பவத்தில், வங்கியின் நகை மதிப்பீட்டாளரின் மோசடிக்கு காவல் துறையினரும் துணை போவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கோவை மாவட்டம், அன்னூர் சத்தி மெயின் ரோடு அருகில் சிண்டிகேட் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் விவசாயிகளுக்கு 33 பைசா வட்டியில் விகிதத்தில் நகை அடமான கடன் கொடுக்கப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்களது நகைகளை அடமானம் வைத்துள்ளனர். இந்நிலையில் இந்த வங்கியில் நகை மதிப்பீட்டாளராக இருந்த செந்தில் என்பவர் அப்பகுதியைச் சேர்ந்த 11 விவசாயிகள் பெயரில் போலி நகைகளை அடமானம் வைத்து வங்கியில் பணம் பெற்று மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு ரூ.10 லட்சத்திற்கும் மேல் விவசாயிகளின் பெயரில் செந்தில் கடன் பெற்றுள்ளார்.இதற்கிடையில் கடந்தாண்டு வங்கி மேலாளர் அடமானம் வைத்த நகைகளை ஆய்வு செய்தபோது, அவை போலி நகைகள் என்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து வங்கி மேலாளர் காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் புகார்தெரிவித்தார். இதையடுத்து மேற்குறிப்பிட்ட 11 விவசாயிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு அவர்களிடம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டார். அப்போது, இந்த போலி நகைக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதன்பின் சம்பந்தப்பட்ட 11 விவசாயிகளும், வங்கிக்கு சென்று வங்கியில் தங்கள் கணக்கிலிருந்த பணம் மற்றும் அடமானம் வைத்திருந்த மற்ற நகைகளை மீட்கச் சென்றனர். ஆனால், இதனை அனுமதிக்காத வங்கி மேலாளர் நகை மதிப்பீட்டாளர் செந்தில் மோசடி செய்து உங்கள் பெயரில் வாங்கியிருந்த நகைக் கடனை கட்டி முடித்த பின்னர்தான், உங்கள்வங்கிக் கணக்கில் இருந்து பணம்,நகையை எடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

இதனால் ஆவேசமடைந்த பாதிக்கப்பட்ட விவசாயிகள் மோசடியில் ஈடுபட்ட நகை மதிப்பீட்டாளர் செந்திலை பிடித்து அன்னூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது, போலி நகையை வைத்து பெற்ற கடனை ஒரு மாதகாலத்திற்குள் அடைப்பதாக நகைமதிப்பிட்டாளர் செந்தில் தெரிவித்ததையடுத்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.ஆனால், தற்போது வரை அந்த மோசடி தொடர்பாக காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால் சம்பந்தப்பட்ட விவசாயிகள் பெரும்சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், இரண்டு வருடங்களாக எங்கள்வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. எங்களுடைய நகையும் எடுக்க முடியவில்லை. காவல்துறையினரும் வங்கிக்கும், மோசடி நபர் செந்திலுக்கும் ஆதரவாக செயல்படுகின்றனர். இந்த வேதனை தாங்காமல் பொன்னுசாமி என்ற விவசாயி ஒருவர் மரணம் அடைந்து விட்டார். இம்மோசடியை வெளியில் தெரிவித்தால் நீங்கள் தான் ஒட்டு மொத்தக் கடனையும் கட்ட வேண்டிய சூழ்நிலை வரும் என்று காவல் துறையினர் எங்களை மிரட்டுகின்றனர். வங்கி மேலாளரும் அதே தோரணையில் பேசுகிறார் என வேதனையோடு தெரிவித்தனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்னூர் ஒன்றிய செயலாளர் ஏ.முகது மூசிர் கூறுகையில், 11 விவசாயிகள் மீது பொய்யான வழக்கு பதிவு செய்ததை திரும்பப் பெற வேண்டும். மோசடியில் ஈடுபட்ட நகை மதிப்பீட்டாளர் செந்தில் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய வேண்டும். இந்த மோசடி குற்றத்திற்கு துணைபோன வங்கி ஊழியர்கள் உள்பட அனைத்து மீதும் உரிய எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுடைய நகையினை திரும்ப ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு பொதுநல அமைப்பினருடன் இணைந்து சிண்டிகேட் வங்கி முன்பு தொடர் போராட்டம் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.