tamilnadu

img

எந்தக் கட்சியினருக்கும் ஆதரவு இல்லை

அவிநாசி, ஏப்.6-நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சியினருக்கும் ஆதரவு இல்லை என அத்திக்கடவு - அவிநாசி திட்ட கூட்டமைப்பு அறிவித்துள்ளது.அத்திக்கடவு- அவிநாசித் திட்ட கூட்டமைப்பினரின் அவசர ஆலோசனைக் கூட்டம் சேவூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக கூட்டமைப்பின் நிர்வாகிகள் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 60 ஆண்டுகால கோரிக்கையான அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதேநேரம், அத்திக்கடவு திட்ட வெற்றி என்பது போராடிக் கிடைத்த வெற்றி. இது அனைத்துத் தரப்பினருக்கும் சேரும். ஆகவே, அத்திக்கடவு - அவிநாசி கூட்டமைப்பினர் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சியினருக்கும் ஆதரவு தெரிவிப்பதில்லை என ஏற்கனவே முடிவு செய்துள்ளோம்.இந்நிலையில் கூட்டமைப்பைச் சேர்ந்த சிலர், தற்போது நாடாளுமன்ற தேர்தலில் ஒரு குறிப்பிட்ட கட்சியினருக்கு ஆதரவு என்கிற வகையில் கடந்த இரு நாட்களாக மக்களிடையே பிரச்சாரம் செய்து, குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையிலேதான் இந்த அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் முடிவிற்கு மாறாக, குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாக சிலர்பிரச்சாரம் மேற்கொள்வது என்பது கூட்டமைப்பின் முடிவிற்கு மாறானது. இது எந்த வகையிலும் அத்திக்கடவு - அவிநாசி கூட்டமைப்பை பொருட்படுத்தாது. மேலும், அத்திக்கடவு - அவிநாசி கூட்டமைப்பு பெயரை பயன்படுத்தி யாரும் வாக்குசேகரிக்கக் கூடாது எனவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக கூட்டமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.