tamilnadu

மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்

ஈரோடு,ஏப்.8-மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என ஈரோட்டில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் ஆ.கணேசமூர்த்தியை ஆதரித்து ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் மனிதநேய மக்கள்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், மோடி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கப்படும். அந்த விலை அவர்களுடைய உற்பத்தியை விட பன்மடங்கு அதிகமாக இருக்கும் என கடந்த தேர்தலின்போது வாக்குறுதியளித்தனர். ஆனால், இந்தியாவில் மோடி ஆட்சியில் தான் அதிகமான விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மேலும், மோடி அரசுக்கு எதிராக வடமாநிலங்களில் சமீபத்தில் விவசாயிகள் நடத்தியது போன்ற மாபெரும்பேரணிகள் இதற்கு முன்பு நடத்தியதில்லை. இதேபோல், தமிழகத்திலிருந்து சென்ற விவசாயிகள் தில்லியில் நிர்வாணமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வாறு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் கூட, இந்தி நடிகையின் திருமணத்திற்கு செல்வதற்கு நேரம் ஒதுக்கிய மோடி, விவசாயிகளின் கோரிக்கையை கேட்க நேரம் ஒதுக்கவில்லை. 


இந்நிலையில் தற்போது மோடி தன்னை காவலாளி என சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த காவலாளியை யார் வைப்பார்கள் என்றால், பணக்காரவீடுகளிலும், தொழிற்சாலைகளிலும் தான் காவலாளியாக வைப்பார்கள். ஏழை, எளிய நடுத்தரமக்களின் வீடுகளில் காவலாளிகளை பார்க்க முடியாது. இந்த உண்மையை உணர்ந்துதான் மோடி தன்னை காவலாளி என்று சொல்லி வருகிறார். இந்த காவலாளி மோடி ஆட்சியில் மிகப்பெரிய அளவில் பயனடைந்தவர்கள் என்றால் அம்பானி, அதானி போன்ற மிகப்பெரிய கார்ப்பரேட் முதலாளிகள் தான். மோடி வெளிநாடு செல்லும் போதெல்லாம் அம்பானி, அதானி ஆகியோரை அழைத்துச் சென்று பல லட்சம் கோடி ரூபாய்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளார். இப்படிப்பட்ட மோடியின் ஆட்சியானது அனைத்து மக்களுக்கும் எதிரான ஆட்சியாக இருந்துள்ளது. 


மேலும், மாட்டு இறைச்சி என்ற பெயரில் சிறுபான்மை மக்களும், தலித் மக்களும் அடித்துகொல்லப்பட்டனர். அந்த கொலையாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்காமல் அவர்களை தப்பிக்க வழி வகுத்தது இந்த மோடி ஆட்சி. ஆகவே, இவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதில் வேறு மாற்றுக் கருத்தே கிடையாது. அரசியல் சாசனம் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு தந்திருக்கக்கூடிய உரிமைகளுக்கு முரணாக முத்தலாக் சட்டத்தைக் கொண்டுவந்து அதை நிறைவேற்றுவதற்கு முனைந்தார். ஆனால், எதிர்கட்சிகளின் வன்மையான எதிர்ப்பால் தோற்றுப் போய்உள்ளார். அதேபோல் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை தோற்கடித்து அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். ஆகவே ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் ஆ.கணேசமூர்த்தி, தமிழர்களின் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர். அதற்காக பல நாள் சிறையில் இருந்துள்ளார். எனவே, அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறுஅவர் பேசினார்.