tamilnadu

img

லாட்டரி அதிபர் மார்டினின் காசாளர் மர்ம மரணம்

மேட்டுப்பாளையம், மே 9- லாட்டரி அதிபர் மார்டினின் காசாளர் பழனிச்சாமி மர்மமான முறையில்உயிரிழந்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்தக்கோரி மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டனர்.பிரபல தொழிலதிபரும், லாட்டரி சீட்டு விற்பனையாளருமான மார்டினுக்கு சொந்தமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள அவரது நிறுவனங்களில் கடந்த ஏப்.30 ஆம் தேதிவருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். ஒரே நேரத்தில் எழுபதிற்கும் மேற்பட்ட இடங்களில் இச்சோதனை நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக கோவையில் உள்ள மார்டினுக்கு சொந்தமான பியுச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீஸ் என்ற நிறுவனத்திலும் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்றது. இதன்பின் இங்கு காசாளராக பணியாற்றி வந்த பழனிசாமி என்பவரது வீட்டிலும் கடந்த மே 2ஆம் தேதியன்று வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டதோடு கணக்கில் வராத சொத்து விபரங்கள் குறித்து விசாரணை நடத்தினர். 

கோவையை அடுத்துள்ள உருமாண்டம்பாளையம் பகுதியில் வசித்துவரும் காசாளர் பழனிசாமி (45)கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகமார்டினுக்கு சொந்தமான நிறுவனத்தில் பணியாற்றி வருவதோடு, அவரின்குடும்பத்திற்கு நம்பிக்கைக்கு உரியவராக இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த இரண்டாம் தேதி கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள வெள்ளியங்காடு நீர்தேக்க குட்டையில் பழனிசாமி சடலமாக மீட்கப்பட்டார். இவர் வருமான வரித்துறையினர் நடத்திய விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட ஆய்வில் காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால், பழனிசாமியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், மரணத்திற்கு மார்டினின் அலுவலக ஊழியர்கள்தான் காரணம் என்பதால் இவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடுமையான முறையில் விசாரணையில் ஈடுபட்ட வருமான வரித்துறையினர் மீதும் சட்டப்படி நடவடிக்கைஎடுக்க வேண்டும் என பழனிசாமியின்உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இக்கோரிக்கையினை வலியுறுத்தி பழனிசாமியின் உடலை பெற இதுவரை அவரது குடும்பத்தார் மறுத்து வருகின்றனர். இந்நிலையில் பழனிசாமியின் மரணத்தை எஸ்.சி – எஸ்.டி வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும். இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி மரணத்திற்கு காரணமானவர்கள் எனசந்தேகிக்கும் அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இதேபோல், பழனிசாமியின் மன உளைச்சலுக்கு காரணமான வருமான வரித்துறையினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புதனன்று மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே சாதி ஒழிப்பு விடுதலை முன்னணியினர் தடையை மீறிதீடீரென ஆர்பாட்டத்தில் ஈடுபடமுயன்றனர்.இதையடுத்து போராட்டத்தில்ஈடுபட்ட பெண்கள் உள்பட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் காரணமாக மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே சற்று நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.