tamilnadu

img

குடியிருப்போருக்கு பட்டா வழங்குக! -

அனைத்து சமய நிறுவன நிலங்கள்

தமிழகம் முழுவதும் சிபிஎம் மாபெரும் இயக்கம்

சென்னை, நவ. 26 - குடிமனைப் பட்டா கோரி விரைவில் குடியேறும் போராட்டம் நடத்துவோம் என்றும் கோவில் நிலத்தை விநியோகிக்கும் விஷயத்தில் கேரள அரசு போல் தமிழக அரசு செயல்பட வேண்டும் என்றும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை 318-ன் படி புறம்போக்கு, கோவில் நிலம்  உள்ளிட்ட இடங்களில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி செவ்வாயன்று  (நவ.26) தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாபெரும் மனு அளிக்கும் இயக்கம் நடத்தியது.  சென்னை மாம்பலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கட்சியின் விருகம்பாக்கம் பகுதிக்குழு சார்பில் நடைபெற்ற இவ்வியக்கத்தில் நூற்றுக்கணக்கானோர் மனுக்களு டன் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து வட்டாட்சியர் மோகன் குமார் நேரடியாக வந்து மக்களிடமும், தலைவர்களிடமும் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

பேச்சுவார்த்தை

இதன்தொடர்ச்சியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், மாநிலக்குழு உறுப்பினர் க.பீம்ராவ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.செல்வா, பகுதிச் செயலாளர் சி.செங்கல்வராயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்பேச்சுவார்த்தையில் “அடையாறு கரையோர குடியிருப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கரையோரம் உள்ள வசதி படைத்தவர் களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு மட்டும் மறுக்கப்படுகிறது. அடை யாறு கரை எல்லை வரையறை செய்வதில் தவறு நடைபெறுகிறது. அதனைத் தடுக்க வேண்டும்” என்று சிபிஎம் தலைவர்கள் வலியுறுத்தினர். அதற்கு பதிலளித்த வட்டாட்சியர், “தவறுகள் நிகழாமல் வரையறை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களிடம், கட்சியிடமும் பெறப்பட்ட மனுக்களை நில நிர்வாக ஆணையருக்கும், ஆட்சியருக்கும் அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப் படும்” என்றார்.

மக்களுக்கு எதிராக ‘இந்து’ அமைப்புகள்

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்  ஜி.ராமகிருஷ்ணன், “புறம்போக்கு, கோவில், மேய்ச்சல் நிலங்களில் குடியிருப் போருக்கு நில வகைமாற்றம் செய்து பட்டா வழங்க தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் 30ஆம்  தேதி அரசாணை 318ஐ வெளியிட்டது. அதன்படி நில வகைமாற்றம் செய்து  பட்டா வழங்கவில்லை. எனவே, பட்டா கேட்டு தமிழகம் முழுவதும் இன்றைய தினம் (நவ.26) போராட்டம் நடைபெறுகிறது” என்றார். “விருகம்பாக்கம் தொகுதி, 137, 138, 131 ஆகிய வட்டங்களில் 40 ஆண்டு களுக்கும் மேலாக புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா கேட்டு மனு கொடுத்துள்ளோம். அரசியலமைப்புச் சட்டம் கையெழுத்தான தினத்தில், 70 ஆண்டுகளுக்குப் பிறகும் பட்டா கேட்டு மனு கொடுக்கும் அவல நிலைதான் உள்ளது. இத்தகைய சூழலில்தான் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம் நடத்துகிறது. அரசாணையின்படி மனைப்பட்டா வழங்காவிடில் குடியேறும் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழல் எழும்” என்று எச்சரித்தார். “கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க அரசாணை வகை செய்கிறது. அதற்கெதிராக சங்பரிவாரங்கள், ‘இந்து’ அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அந்த ஒருப் பிரிவுக்கு மட்டும் நீதிமன்றம் தடை பிறப்பித்துள் ளது. இதன்மூலம் ஆர்எஸ்எஸ், பாஜக பரிவாரம் மக்களுக்கு விரோதமாக எப்படி யெல்லாம் செயல்படுகிறது என்பது உதாரணம்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசிடம் பட்டியல் உள்ளது

செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ஜி.ராமகிருஷ்ணன், “கோவில் நிலங்களில் குடியிருப்போர், சாகுபடி செய்வோரிடமிருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.  கோவில் நிலங்களில் இருப்பவர்களின் பட்டியல் அரசிடம் உள்ளது. எனவே, அந்த  ஆவணங்களின் அடிப்படை யில் கோவில் பயனாளிகளுக்கு பட்டா வழங்க வேண்டும்.  கேரளாவில் கோவில் நிலத்தை பயன்படுத்தியவர்களிடமே அந்த நிலத்தை விற்று, அதில் கிடைத்த பணத்தை வைப்புத் தொகையாக வைத்துள்ளனர். அந்த வட்டி வருவாயிலிருந்து கொண்டு கோவிலை நிர்வகிக்கின்றனர். அந்த முறையை தமிழக அரசும் பின்பற்ற வேண்டும்” என்றார். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த மாபெரும் இயக்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று மனு அளித்தனர்.