tamilnadu

ஈரோடு மற்றும் திருப்பூர் முக்கிய செய்திகள்

ஜோராக நடந்த ஆளுங்கட்சியினர் பணப்பட்டுவாடா


மவுனமாக உள்ள மாவட்ட தேர்தல் அதிகாரிகள்


ஈரோடு, ஏப்.17-தமிழகத்தில் வியாழனன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் நடைமுறை விதிகள் அமலில் உள்ள நிலையில், ஆளுங்கட்சியினர் பணப்பட்டுவாடாவை தீவிரப்படுத்தி உள்ளனர். இதனை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் மவுனமாக உள்ளனர். ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில், அதிமுக வேட்பாளராக போட்டியிடும் ஜி.மணிமாறனுக்கு ஆதரவு கேட்டு ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு, மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.வி.ராமலிங்கமும் தீவிர பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு சூரம்பட்டி பகுதியில் புதனன்று மேற்கு தொகுதி மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.வி.ராமலிங்கம் தலைமையில் ஒரு பகுதியினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டனர். ஒரு ஓட்டுக்கு ரூ.150 முதல் ரூ.300 வரை விநியோகித்து வருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் என அனைவருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் அதை எந்த அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை.இதுகுறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.கதிரவன் புதனன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,பணம் விநியோகிப்பது குறித்து எந்தப் புகாரும் இதுவரை வரவில்லை. ஒரு சில புகார்கள் இணையம் மூலமாக வந்தது, அதனையும் விரைவாக பறக்கும் படையினரைக் கொண்டு அந்த இடத்திற்கு சென்று சோதனையிடப்பட்டது. மேலும் ஆரத்தி எடுத்து அதற்கு அதிமுகவினர் பணம் கொடுத்ததாக புகார் எதுவும் வரவில்லை. ஆகவே இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் நடக்கும் நாளன்று 5 கம்பெனிகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் தேர்தல் நடக்கும் ஏப்ரல் 18ஆம் தேதியன்று 4 கம்பெனி வீரர்களும், ஓட்டு எண்ணும் நாளன்று ஒரு கம்பெனி வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 18,83,419 வாக்காளர்கள் உள்ளனர். அதில் 9,22,546 ஆண்கள், 9,60,804 பெண்கள், 69 மூன்றாம் பாலினத்தினர் மற்றும் 255 படைவீரர்கள் உள்ளனர். 912 வாக்குப்பதிவு மையங்களில் 2,213 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 14,62,076 வாக்காளர்கள் உள்ளனர். அதில் 7,15,617 ஆண்கள், 7,46,355 பெண்கள், 104 மூன்றாம் பாலினத்தினர் மற்றும் 170 படைவீரர்கள் உள்ளனர். 646 வாக்குப்பதிவு மையங்களில் 1,678 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2213 வாக்குச்சாவடிகளுக்கு 9,238 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.


குடிநீர் சீராக வழங்க கோரிக்கை


திருப்பூர், ஏப். 17 -திருப்பூர் மாநகராட்சி 2ஆவது வார்டு ஆத்துப்பாளையம், திருவள்ளுவர் நகர், அண்ணாநகர் பகுதிகளில் 15 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் கிடைக்கிறது. கோடை காலமாக இருக்கும் நிலையில் இப்பகுதி மக்களுக்கு போதுமான குடிநீர் கிடைப்பதில்லை. குழாய்கள் அடிக்கடி பழுதடைந்து குடிநீர் தடைபடுகிறது. எனவே இப்பகுதி மக்களுக்குச் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொது மக்கள் திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டல உதவி ஆணையரிடம் மனுக் கொடுத்துள்ளனர்.