tamilnadu

அன்றும்... இன்றும்...

கைத்தறி நெசவாளர்களுக்காக நாடாளுமன்றத்தில் பி.ஆர்.நடராஜனின் குரல்

அன்று…

2013 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பி.ஆர் நடராஜன் எழுப்பிய கேள்வி: கைத்தறி நெசவாளர்கள் நாடு முழுவதும் மாநில அளவில் எத்தனை பேர் உள்ளனர்? கடன் சுமையால் நெசவாளர்கள் தற்கொலை அதிகரித்துள்ளதா? அவர்களுக்கு சலுகை வட்டியில் கடன் வழங்க அரசு முன்வருமா?

மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் பனபாக லட்சுமி அளித்த பதில்: நாடு முழுவதும் 43 லட்சத்து 71 ஆயிரம் நெசவாளர்கள் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் 3 லட்சத்து 52ஆயிரத்து 321 பேர், புதுச்சேரியில் 2ஆயிரத்து 803பேர் உள்ளனர். ஆந்திர பிரதேசத்தில் மட்டும் 2013இல் 31 நெசவாளர்கள் தற்கொலை செய்துள்ளனர். ஒருங்கிணைந்த கைத்தறி வளர்ச்சி திட்டத்தின்கீழ் கடன் வழங்கும் திட்டம் கொண்டுவரப்படும். 3 சதவீத வட்டியில் 20 சதவீதம் (அதிகபட்சம் ரூ.10ஆயிரம்)மானியத்துடன் கூடிய கடன் திட்டம் 2013-14இல் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாதவர்களுக்கு உதவும் வகையில் ஆர்ஆர்ஆர்பி என்கிற இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் ஒருங்கிணைந்த நலத்திட்டத்தின் கீழ் சுகாதார காப்பீட்டுத்திட்டம்(HIS), மகாத்மா காந்தி பங்கர் பீமா யோஜனா(MGBBY) திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகின்றன. எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்ட அமைச்சரின் நீண்ட பதிலில், அந்த திட்டங்களின் பயன்களையும் குறிப்பிட்டுள்ளார்.


இன்று…

சுகாதாரக்காப்பீடு (HIS) திட்டத்திற்கு 2013-14இல் ரூ.49.21கோடியும், எம்ஜிபிபிஒய் (MGBBY) திட்டத்துக்கு ரூ.16.61 கோடியும் ஒதுக்கப்பட்டது. மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு 2014-15 இல் இரண்டு திட்டங்களுக்கும் சேர்த்து ஒதுக்கப்பட்ட தொகை ரூ.42.26 கோடி மட்டும். 2015-16இல் வெறும் ரூ.18.61கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2016-17இல் HIS க்கு மட்டும் ரூ.6.63 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எம்ஜிபிபிஒய் (MGBBY) திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடே இல்லாமல் கைவிடப்பட்டுள்ளது.

தி எக்கனாமிக் டைம்ஸ் (01.02.2019) வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: “2018-19 மத்திய பட்ஜெட்டில் கைத்தறி துறைக்கு முந்தைய ஆண்டைவிட 36 சதவீதம் அளவுக்கு குறைவாக ரூ.386.09 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பணவீக்கம், ஜிஎஸ்டி, தொழில் போட்டி, நூல் விலை உயர்வும் சேர்ந்து இது கைத்தறித்துறையை கடும் வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும். இதை நம்பி இருக்கும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்களை கடுமையாக பாதிக்கும்.” என கூறப்பட்டுள்ளது.