கோபி:
கடந்த 2018ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வெழுதியவர்களில் 857 பேர் தேர்ச்சி பெற்றனர்.அதில் மூன்று இடங்களில் கணினி பழுது காரணமாக 41 பேர் செல்போன் மூலமாக தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது.
இதனால் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் இதுகுறித்து வழக்கு தொடர்ந்தனர். வழக்கு காரணமாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.இந்நிலையில் இந்த வழக்கில் குறிப்பிட்ட தேர்வு அறையில் இருந்தவர்களுக்கு மறு தேர்வு வைக்க நீதிமன்றம்உத்தரவிட்ட நிலையில் மற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்குவதில் தடையில்லை என்று கூறியது. அதைத் தொடர்ந்து தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த வாரம் கோபியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை சந்தித்து மனு அளித்தனர். அப்போது முதலமைச்சரிடம் கலந்து ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறினார்.இந்நிலையில் சனிக்கிழமை காலை 50க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கோபியில் மீண்டும் அமைச்சர் செங் கோட்டையனை சந்தித்தனர்.அப்போது ஓரிரு நாளில் முதலமைச்சரிடம் கலந்து பணி நியமன ஆணை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச் சர் கூறியதை தொடர்ந்து ஆசிரியர்கள் கலைந்து சென்றனர்.