சிதம்பரம், ஏப். 6-சிதம்பரம்(தனி) மக்களவை தொகுதியில் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார் கோயில் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக கூட்டணி கட்சியினர்களுடன் தீவிர தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். சனிக்கிழமையன்று (ஏப்.6) சிதம்பரம் நகரத்திலுள்ள காரிய பெருமாள்கோவில் தெருவில் பிரச்சாரத்தை தொடங்கி கீழவீதி, மேலவீதி, கோவிந்தசாமி தெரு, அண்ணாதெரு உள்ளிட்ட நகரின் 33 வார்டுகளுக்கும் கூட்டணி கட்சியினருடன் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் கூடியிருக்கும் மக்களிடம் உரையாற்றிய திருமாவளவன், “நாடு முழுவதும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. தமிழகத்திலும் எடப்பாடிக்கும் எதிரான அலை வீசுகிறது. கடந்த 40 ஆண்டுகாலம் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களை பாதுகாக்க பொது வாழ்க்கையில் ஈடுபடுத்திக் கொண்டு தன் நலமின்றி வாழ்ந்து வருகிறேன். உங்களின் குரல் நாடாளுமன்றத் தில் ஒலிக்க பானை சின்னத்திற்கு வாக்களியுங்கள்” என்றார்.திமுக முன்னாள் அமைச் சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், நகரச் செயலாளர் செந்தில்குமார், காங்கிரஸ் நகர தலைவர் பாலதண் டாயுதம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் ராஜா, மதிமுக மாவட்டச் செயலாளர் குணசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகி சேகர் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.
ஜவாஹிருல்லா பிரச்சாரம்
தொல். திருமாவளவனுக்கு வாக்குகள் கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் காட்டுமன்னார் கோயில் அருகேயுள்ள லால்பேட்டையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், குமராட்சி ஒன்றியச் செயலாளர் மாமல் லன். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பிரகாஷ், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட நிர்வாகி ரவிபிரகாஷ் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் உரையாற்றினர்.