சென்னை, ஏப். 17-ஜனநாயகத்தை காப்பாற்ற நாங்களை வீதிக்கு வந்து போராடுகின்ற சூழலை உருவாக்கிவிட வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் செவ்வாய்க்கிழமை(ஏப்.16) மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. அடுத்த சில மணி நேரங்களில், வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன்பின், தூத்துக்குடியில் கனிமொழி தங்கியிருக்கும் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சம்பவங்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.
மு.க. ஸ்டாலின்: யாரை திருப்திபடுத்த தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேர்தலில் நடு நிலைமை என்ற தேர்தல் ஆணையத்தின் கோட்பாடு மோடியின் காலில் மிதிப்பட்டுக் கிடக்கிறது. ஜனநாயகத்தை காப்பாற்ற எங்களை வீதிக்கு வந்து போராடுகின்ற சூழலை உருவாக்கிவிட வேண்டாம். வேலூரில் எப்போது தேர்தல் நடத்தப்பட்டாலும் வெற்றி பெறப்போவது திமுக தான்” என்றார்.
அத்து மீறல்!
ஆர். முத்தரசன்: கனிமொழியின் வெற்றி உறுதி என்ற நிலையில்,அவரது வெற்றி வாய்ப்பை தடுக்கும் வகையிலும், பாஜக வேட்பாளர் தமிழிசைக்கு சாதகமாக வருமானவரித் துறையை, மத்திய பாஜக அரசு ஏவி விடுவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது. அப்பட்டமான ஜனநாயக விரோதச் செயலாகும். தேர்தல் ஆணையம் உடனடியாக செயல்பட்டு, பாஜக அரசின் அத்து மீறல்களையும், அதிகார துஷ்பிரயோகங்களையும் தடுத்து நிறுத்த வேண்டும்.
ஜனநாயக படுகொலை!
வைகோ: இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் தேர்தல் ஆணையம், வேலூர் தேர்தலை ரத்து செய்திருக்கிறது. தேர்தலை தடை செய்ததற்கு தேர்தல் ஆணையம் முன்வைத்த காரணங்கள் நியாயமற்றது, ஏற்றுக்கொள்ள முடியாதது. தூத்துக்குடி சம்பவம் திமுக வேட்பாளர்களை அபாண்டமாக களங்கப்படுத்தும் நோக்கத்துடன் மத்திய அரசு வருமான வரித்துறையை முறைகேடாகப் பயன்படுத்தி வருவது கண்டனத்துக்குரியதாகும்.தமிழகத்தில் ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு வீடு வீடாகச் சென்று ரூபாய் 1000, 2000, 5000 என்று அள்ளி வீசுவதைத் தடுக்க திராணியற்ற தேர்தல் ஆணையம் எடப்பாடி அரசின் காவல்து றையை ஏவி, எதிர்க்கட்சியினரை மிரட்டுவது அக்கிரமச் செயலாகும்.
பாடம் புகட்ட வேண்டும்....
தொல்.திருமாவளவன்: வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்தும், தூத்துக்குடியில் வருமானவரித்துறை சோதனையை ஏவியும், ஆண்டிபட்டியில் துப்பாக்கி சூடு நடத்தியும் ஆளும் அதிமுகவினர் நடத்திவரும் ஜனநாயகப் படுகொலைக்கு தேர்தல் ஆணையம் துணை போவதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.பாஜக - அதிமுக கூட்டணி நடத்திவரும் ஜனநாயகப் படுகொலை யைப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் அவர்களுக்கு இத்தேர்தலில் உரிய பாடம் புகட்ட வேண்டும்.
எம்.எச்.ஜவாஹிருல்லா: அதிமுக-பாஜக கூட்டணி வேட்பாளர்கள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் சம்பவம் வெளிப்படையாக நடந்து வருகிறது. ஆனால் அதுபற்றி நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம், திமுக இந்த தேர்தலில் வெற்றிபெறக் கூடாது என்ற நோக்கத்தில் ஆணையத்தின் கடைசி நேர அறிவிப்பு பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரியும் கண்டித்துள்ளார்.