tamilnadu

img

சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வலியுறுத்தல்

செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறார் கோகுல் ஸ்ரீ வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், சிபிசிஐடி விரைந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கூட்டு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் இ. ஆசிர்வாதம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் கோகுல் ஸ்ரீக்கு,  31.12.2022 அன்று வலிப்பு நோயால் பாதிப்பு ஏற்பட்டது என்றும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது  இறந்துவிட்டார் என்று கூறப்பட்டது. இதன்படி, கூர்நோக்கு இல்ல கண்காணிப்பாளர் மோகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. உண்மை வெளிவந்தது இளஞ்சிறார் கோகுல் ஸ்ரீ உடல், பிரேதப் பரிசோதனையில் 96 காயங்கள் ஏற்பட்டதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், நீதித்துறை நடுவர், மற்றும் மாநில மனித உரிமை ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் மழுங்கிய விளிம்பு கொண்ட ஆயுதத்தால் பல முறை தாக்கப்பட்டு உடல் முழுவதும் பல தரப்பட்ட காயங்கள் விளைவாக இறந்திருக்கிறார் என உறுதிப்படுத்துகிறது. இதன் பின்னரே வழக்கின் சட்டப்பிரிவை 302 பிரிவின் கீழ் கொலை வழக்காக காவல் துறையினர் மாற்றம் செய்தனர். நிவாரணம் இதையடுத்து, குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பிறகு முதல்வர் தலையிட்டதால், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்  நிவாரணம், இலவச வீடு வழங்கினார். மேலும் சிபிசிஐடி விசார ணைக்கும் உத்தரவிட்டார்.  அதனைத் தொடர்ந்து, சிபிசிஐடி விசாரணை தொடங்கி இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில், இன்று வரை குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. விரைவாக கோகுல் ஸ்ரீ வழக்கில் சிபிசிஐடி சார்பில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஒரு நபர் குழு  இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் சார்பாக ஒரு பிரதிநிதியும் உள்ளடக்கிய உயர் மட்டக் குழு உருவாக்கப்பட்ட்டது. அந்த குழு 800 பக்க அறிக்கையை சமர்ப்பித்தும் அது சம்பந்தமான முழுத் தகவல்கள் வெளியிடப்படவில்லை ஏன்? மேலும் கோகுல்ஸ்ரீ தாயார் பிரியாவை கடத்தி, மிரட்டல் விடுத்த முன்னாள் காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் சிவக்குமார் மற்றும் செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தின் முன்னாள் மேலாளர் பாலாஜி ஆகியோர் மீது இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? கடந்த 2012 ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 20,829 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 8,190 வழக்குகள் முடிக்கப்பட்டு 5,631 பேர் விடுவிக்கப்பட்டுள்ளன. மீதம் 8,000க்கும் மேற்பட்ட போக்சோ வழக்கு விசாரணையை துரிதப்படுத்த 19 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்ட நிலையில் அவற்றில் 8 நீதி மன்றங்கள் மட்டுமே 200க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. பெண்கள், குழந்தைகள் மீதான சித்திரவதை வன்கொடுமைகளை தடுக்க கடுமையான சட்டங்கள் மட்டும் இருந்தால் போதாது, விசாரணை அமைப்புகளும் தரமான விரைவான செயல்பாட்டின் மூலமே கடுமையான தண்டனையை உறுதிப்படுத்த முடியும் எனவே, குழந்தைகள் நலன் சார்ந்து செயல்படக்கூடிய அமைப்புகளுக்கு, குழந்தைகள் உரிமை சார்ந்த நலன் சார்ந்த அறிவை வளர்க்க சிறப்பு பயிற்சிகளை தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.   இவ்வாறு தெரிவித்தனர்.  சந்திப்பின்போது சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.எஸ். பாரதி அண்ணா, செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ம.பா.நந்தன், சதீஷ்குமார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் இரா சதீஷ், கோகுல்ஸ்ரீயின் தாயார் பிரியா ஆகியோர் உடனிருந்தனர்.