இதுவரையிலான உழைக்கும் வர்க்கம் பெற்ற உரிமைகள் அனைத்தும், முதலாளிகளின் கருணையில் கிடைத்தவையல்ல. அனைத்தும் தொழிலாளி வர்க்கத்தின் தொடர் போராட்டத்தால், தியாகத்தால் விளைந்தவை. தங்கம் செய்யாததை சங்கம் செய்யும் என்கிற முழக்கம் வெற்று முழக்கமல்ல. அனுபவத்தில் ஆர்த்தெழுந்த எழுச்சிகர வார்த்தைகள். அதிகாரத்தை எதிர்த்து துவண்டுவிடாத போராட்டத்தை சாலைப்பணியாளர் சங்கம் நடத்தியதன் விளைவே இன்று கம்பீரமாக தலைநிமிர்ந்து நிற்கிறோம். அதே கம்பீரத்தோடு, நிலுவையில் உள்ள கோரிக்கைகளை வென்றெடுக்க திட்டம் வகுக்கும் மாநாடு உடுமலையில் செ.8,9 தேதிகளில் நடைபெறுகிறது.
தமிழக நெடுஞ்சாலைத்துறை 9 வட்டங்கள், 44 கோட்டங்களுடன் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் 2.61 இலட்சம் கிலோமீட்டர் நீளம் கொண்டு சாலைகளில், நெடுஞ்சாலைத்துறை மூலம் 66.382 கிலோ மீட்டர் நீள நெடுஞ்சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இவற்றில், மாநில தலைநகரங்கள் முக்கிய துறைமுகங்கள் பெரிய தொழிற்துறை பகுதிகள் மற்றும் சுற்றுலா மையங்களை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் மாநில தேசிய நெடுஞ்சாலை அலகின் கீழ் 1677 கிலோ மீட்டர் சாலைகளும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மூலம் 5128 கிலோமீட்டர் நெடுஞ்சாலைகள் மொத்தம் 6805 கிலோமீட்டர் சாலைகள் தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் நீளமாகும்.
தமிழக நெடுஞ்சாலைத்துறையில் பராமரிக்கப்பட்டு வரும் நெடுஞ்சாலைகளை பராமரிக்க நிரந்தர சாலைப்பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்தது சொற்ப அளவில் நிரந்தர சாலைப்பணியாளர்கள் பணியாற்றி வந்த நிலையில், 997ம் ஆண்டுக்கு முந்தைய காலகட்டத்தில் நெடுஞ்சாலைகளை பராமரிக்க இரட்டிப்பு செலவுகள் செய்து பராமரித்து வந்ததாலும் நெடுஞ்சாலைகள் முழு அளவில் பராமரிக்கப்படாத நிலைமை இருந்தது.
மேற்சொன்ன நிலையினை பரிசீலித்து தமிழகத்தின் முதலமைச்ராக இருந்து டாக்டர். கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு தமிழக நெடுஞ்சாலைகளை பராமரிக்க நிரந்தரமாக சாலைப்பணியாளர்கள் 1997இல் பத்தாயிரம் கிராமப்புற இளைஞர்களுக்கு பணி வழங்கி நியமித்தது என்பது மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசிற்கு உதாரணமாக திகழ்ந்தது.
சாலைப்பணியாளர்கள் அமைப்பாக அணி திரட்டப்படவேண்டும் சமூக அக்கறை கொண்டவர்களாக மக்களின் ஊழியராக சிறந்த சேவகர்களாக திகழவேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சாலைப் பணியாளர்களை உறுப்பினர்களாக இணைத்ததுடன் சாலைப்பணியாளர்களுக் கென்று தொழிற்சங்க அமைப்பு சாலைப்பணியாளர்களால் தலைமை தாங்க கூடிய அமைப்பாக அது செயல்படவேண்டும் என்ற அடிப்படையில் 2000செப்17ல் விருதுநகரில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் துவங்கப்பட்டது.
இந்நிலையில், நெடுஞ்சாலைகள் பராமரிப்பு பணியை தனியார் பராமரிக்கும் வகையில் தனியார் கம்பெனிக்கு சாலை பராமரிப்பை வழங்கும் முடிவை, முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதா எடுத்ததின் விளைவாகவே 10 ஆயிரம் சாலைப்பணியாளர்கள் 07.09.2002-ல் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது. 41 மாத காலம் சாலைப்பணியாளர்கள் தொடர்ச்சியாக போராடியதும் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் 10.02.2006ல் சாலைப்பணியாளர்களுக்கு மீண்டும் தமிழக அரசு பணி வழங்கியது.
பல்வேறு அமைப்புகள் இருந்தாலும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கம் மட்டுமே நீதிமன்ற வழக்குகளை நடத்தி வெற்றி கண்டதுடன் நீதிமன்ற போராட்டங்களை இறுதிவரை நடத்தி அனைவரையும் 13.02.2006 முதல் பணியில் சேர்த்திட போராடி வெற்றிக்கண்ட பேரியக்கம்.
பணியை மீட்டெடுத்ததோடல்லாமல் சங்க அமைப்பின் கொள்கை பிரகடனமாக நெடுஞ்சாலை பராமரிப்பு பணியை தமிழக அரசே மேற்கொள்ள செய்திடவேண்டும். நெடுஞ்சாலை பராமரிப்பு பணியை தனியார் பராமரிக்க வழங்கும் அரசின் கொள்கை முடிவை திரும்ப பெறச் செய்திட தொடர்போராட்டங்களை விடாப்பிடியான போராட்டங்களை நெடுஞ்சாலைத்துறையை மக்கள் சேவைத்துறையாக பாதுகாத்திட! வெற்றி கண்டிட! தொடர் இயக்க நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம்.
நீதிகேட்டு நெடும்பயணம் தனியார் மய எதிர்ப்பு மூன்று முனைகளிலிருந்து மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம், தனியார் மய எதிர்ப்பு மாநில மாநாடு என தொடர் போராட்டங்களை நடத்தி, அன்றைய அதிமுக அரசின் பல்வேறு பொய் வழக்குகளை சந்தித்து முறியடித்ததோடு மட்டுமல்லாது 2021 ல் மிகப்பெரும் ஆட்சி மாற்றத்தையும் எதிர்நோக்கி சாலைப்பணியாளர்கள் அவர்தம் குடும்பத்தினரோடு முன்னெடுத்த விடாப்பிடியான போராட்டத்தை முன்னெடுத்தோம். இத்தகைய போராட்டங்களே, மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்திட வழி வகுத்தது. நீண்ட காலம் ஒரே கம்பெனி ஐந்தாண்டுகள் பராமரிக்கும் ஒப்பந்த நடைமுறை கைவிடப்படுவதாக அறிவித்து தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
மேற்சொன்ன நிலையில் நெடுஞ்சாலைகளை தனியார் பராமரிக்க அனுமதித்து வரும் மிச்ச சொச்சங்களை தமிழக அரசு முற்றிலும் கைவிடச் செய்திடவும், சாலைப்பணியாளர்களின் ஜீவனுள்ள கோரிக்கைகளை வென்றெடுத்;திடவும். நெடுஞ்சாலைகளை பராமரிக்க கிராமப்புற இளைஞர்களுக்கு சாலைப்பணியாளராக பணி தமிழக அரசு வழங்கச் செய்திடவும், மக்களுடன் இரண்டற கலந்து நின்று அரசின் தவறான கொள்கைகளை முறியடித்திட மக்களை நோக்கிய சேவைப் பணிகளையும் முன்னெடுத்து வருகிறோம்.
இச்சூழலில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் 8 ஆவது மாநில மாநாடு உடுமலையில் இன்று நடைபெற்று வருகிறது. ஒன்றுகூடி கடந்த கால நடவடிக்கைகளை ஆய்வுக்கு உட்படுத்தி எதிர்வரும் இயக்கத்தில் அமைப்பு ரீதியாக முன்னெடுக்க வேண்டிய பணிகளை திட்டமிட்டு முன்னெடுப்பதற்கான வியூகங்களை இம்மாநாடு வகுத்திட உள்ளது.
சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்கவேண்டும்.
சாலை பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியருக்குரிய ஊதியம் ரூ.5,200 - ரூ.20,200 தர ஊதியம் ரூ. 1,900- வழங்கவேண்டும்.
சாலைப்பணியாளர்களில் உயிர்நீத்தோரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறையிலேயே விரைந்து பணி வழங்கவேண்டும்.
சாலைப்பணியாளர்களுக்கு ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்துப்படி, நிரந்தர பயணப்படி, சீருடை சலவைப்படி வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட சாலைப்பணியாளர்களின் ஜீவதாருண்ய கோரிக்கைகளை தமிழக அரசு முன்வரவேண்டும் என்பதை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
இம்மாநாடு நடைபெறும் இச்சூழலில், இந்திய தேசத்தில் வாழும் அனைத்து பகுதி மக்களும், ஒன்றியத்தை ஆளும் இன்றைய ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளின் காரணமாக நீட் உள்ளிட்ட தகுதிச் தேர்வு என்ற நடைமுறையில் எளிய மக்களின் குழநதைகளின் மருத்துவ கல்வி உள்ளிட்ட உயர்கல்வி எட்டாக்கனியாகும் நிலைமை உள்ளது. பொதுத்துறைகள் தனியார் மயப்படுத்துதல் மூலம் வேலை தேடும் இளைஞர்களின் வேலை வாய்ப்பு உரிமை கேள்விக்குறியாகியுள்ளது. மக்களுக்கான சேவைத்துறைகளில் தனியார் மயம், கேஸ் விலை உயர்வு பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக அனைத்து உணவுப் பொருட்களும் கடுமையான முறையில் விலை உயர்ந்துள்ளது. பொதுசிவில் சட்டம், குடியுரிமை திருத்தச்சட்டம். விவசாயிகளுக்கு விரோதமான சட்டங்களை போடுவது போன்ற மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொள்கிறது. மேலும், தேசத்தில் மக்களின் ஒற்றுமையை பிளவுபடுத்தும் நடவடிக்கையால், ஆங்காங்கே ஏற்படும் கலவரங்கள் உரிய தலையீடு செய்து கட்டுப்படுத்தாத ஒன்றிய அரசின் நடவடிக்கை என்பது பேராபத்தையும் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மக்கள் உரிமைகளை மீட்டெடுக்க பாதுகாக்க மகத்தான மாற்றத்தை ஏற்படுத்திட மக்களின் அடிப்படை ஆதாரத்தை பாதுகாத்திட பொதுத்துறைகளை பாதுகாத்திட! படை சேர்க்கவும், உழைக்கும் வர்க்கமாய் அணி சேரவும், பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி தேசம் காக்கும் போராட்டத்தில் சாலைப்பணியாளர்கள் முன்னிற்போம்.
கட்டுரையாளர்
மா.பாலசுப்பிரமணியன்
மாநிலத் தலைவர்
ஆ.அம்சராஜ்
பொதுச் செயலாளர்