சென்னை, மே 2-
அறிவியலுக்கும் அறிவியல் மனப்பான்மைக்கும் அரசியல் சாசனத்திற்கும் விரோதமான இந்து அறநிலையத்துறையின் சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் பேரா எஸ்.மோகனா, பொதுச்செயலாளர் அ.அமலராஜன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: “இந்திய நாட்டின் அரசியல் அமைப்பு சாசனமே உண்மையில் இந்த நாட்டை ஆளுகை செய்கிறது. அரசியல் சாசனத்தின் 51A (H) -ன் படி அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்க வேண்டியதும் அரசியல் சாசனத்தின் கடமைகளில் ஒன்று. தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கப்பட்டதே கூட ஒருவகையான அறிவியல் பூர்வமான அணுகுமுறையே.எத்தகைய வழிபாடுகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், பூஜைகள் போன்றவற்றுக்கும் அப்பாற்பட்டது மழை என்பது அனைவரும் அறிந்த உண்மை. தனிநபர்கள் தங்கள் நம்பிக்கை சார்ந்து அவரவர் விருப்பப்படி கோவில்களில் மழை வேண்டி கடவுள் வழிபாடு செய்யவோ அதனை ஒட்டிய செயல்களில் ஈடுபடவோ முழு உரிமை அவர்களுக்கு உண்டு. ஆனால் இந்த அறநிலையத்துறை என்பது தமிழக அரசின் சார்பில் அரசே தலைமை ஏற்று நடத்தும் ஒரு துறை. இதனை நிர்வகிக்க பணிக்கப்பட்ட ஒரு மூத்த இந்திய குடிமைப் பணி அதிகாரியே மழை வேண்டி யாகம் நடத்துங்கள் என்று சுற்றறிக்கை அனுப்புவது அதிர்ச்சி அளிக்கிறது. இது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது. இத்தகைய செயலை முன்னெடுக்க ஐஏஎஸ் அதிகாரி தேவையில்லை. இத்தகைய அபத்தங்களில் இருந்து துறையைக் காப்பதே பொறுப்புள்ள குடிமைப்பணி அலுவலர்கள் பணி. இந்த சுற்றறிக்கை மத்திய - மாநில அரசுகளின் ஒவ்வொரு துறையும் மதச்சார்பற்ற தன்மையோடு இயங்குவது, அரசியல் சாசனத்தின் அடிப்படையில் நடைபெறுவது என்ற உணர்வை பொய்த்துப் போகச் செய்கிறது.
அறிவியல் படியே அரசு இயங்க வேண்டும்
அறிவியல் அணுகுமுறையிலேயே ஓர் அரசு தன் குடிமக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கடந்த கால புள்ளி விவரங்களை கண்ணுற்றாலே தமிழ்நாட்டின் மழைப் பொழிவின் ஏற்ற இறக்கங்கள் தெரியும். இதன் அடிப்படையில் மழைப்பொழிவு குறைவாக இருக்கும் காலங்களில் மழைநீர் சேகரிப்பு, ஏரி குளங்களை தூர்வாருதல், கசிவு நீர் குட்டைகளை அமைத்தல், நிலத்தடிநீர் சேமிப்புக்கு வழிவகை செய்தல், கிடைக்கும் நீரை சிக்கனமாக கையாளுதல், செலவிடும் நீரின் பயன்பாட்டை அதிகரித்தல் போன்ற வழிமுறைகளில் கவனம் செலுத்தி வறட்சிக்கால நீர்த் தேவைகளை பூர்த்தி செய்ய அரசு கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் வறட்சிக் காலத்தை சமாளிக்க மழை வேண்டி யாகம் நடத்தும்படி சுற்றறிக்கை அனுப்புவது, அரசு தன் பொறுப்பில் இருந்தும் கடமைகளில் இருந்தும் தப்பித்துக் கொள்ள முயல்கிறது என்றே கருத வேண்டி உள்ளது.
மூடநம்பிக்கைகளின் பின்னால் செல்வதா?
மறுபுறம் அரசு சந்திக்கும் பொருளாதாரப் பிரச்சனைகளை அறிவியல்பூர்வமாக அணுகுவதை விடுத்து காரண காரியங்களுக்கு தொடர்பற்ற மூடநம்பிக்கைகளை வளர்ப்பதும் குடிமக்களை இது போன்ற மூட நம்பிக்கைகளின் பின்னே அழைத்துச் சென்று தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு ஆக்கப்பூர்வமான தீர்வுகளை தேடாமல் குறுகியகால உளவியல் தீர்வை தேட வைப்பது அல்லது பிரச்சனைகளில் இருந்து வெளிவர முடியாமல் சிலந்தி வலை போன்ற சிக்கலில் சிக்கித் தவிக்க அரசே துணை போவதற்கு சமமாக இதனைக் கருத வேண்டி உள்ளது. இதுதவிர பன்னெடுங்காலமாக தமிழ்நாட்டில் வளர்த்தெடுக்கப்பட்ட பகுத்தறிவு சிந்தனைக்கும் எதிரானது. பருவ காலங்கள் என்பவை இயற்கை நமக்குத்தந்த கொடை எந்த காலத்தில் பருவ மழையை எதிர்பார்க்க முடியாது மழை பெய்தபோது வீணாக கடலில் சென்று கலந்த நீரை சேமித்து இருந்தாலே கோடையை சமாளித்து இருக்கலாம் அதற்கான திட்டங்களைத் தீட்ட அரசு அதிகாரிகளைப் பயன்படுத்தாத தமிழக அரசு, மக்களை திசை திருப்பவே இப்படி யாகத்தால் மழை வரும் என மூட நம்பிக்கையை போதிக்கிறது. எனவே இந்து அறநிலையத்துறையின் இந்த சுற்றறிக்கையின் மீது ஆழ்ந்த வருத்தத்தையும் கடும் கண்டனத்தையும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பதிவு செய்கிறது. இந்த சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெறும்படி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கோருகிறது.