tamilnadu

img

தனபால் சிற்பியாக உருவான கதை

“நான் பிறந்தது 3-3-1919ல். ஒரே எண்கள் திரும்பவும் வருவதுபோல் என் பிறந்த தினம் அமைந்ததில் இன்றளவும் எனக்குப் பெருமை உண்டு. அந்தக் கால சென்னையில் மயிலாப்பூர்என்பது சொர்க்கபுரிக்கு இணையான ஒரு நகரம். அந்த அளவுக்கு செல்வத்தில்செழித்த ஏரியா அது. மயிலை கச்சேரிரோட்டில் இருந்த எங்கள் வீட்டின் கொல்லைப்புறம் கற்பகாம்பாள் கோயில் நிலத்தை ஒட்டி உரசிக்கொண்டுநிற்கும் அளவுக்குப் பரந்த நிலப்பரப்பு.அப்போதெல்லாம் மயிலாப்பூரில் இத்தனை ஜனநெரிசல் இல்லை; கடைகண்ணியும் இருந்ததில்லை. ஒரே ஒரு பங்க் கடை மட்டும்தான் உண்டு. அதிலும் பத்திரிகைகள், தினப்படி சாமான்கள் போன்றவைதாம் விற்கும். மளிகைக்கடை வைத்திருந்த என் அப்பா சுப்பராயலு அடிக்கடி டவுன் வரை சென்று கடைக்குச் சாமான்கள் வாங்கி வருவார். டவுனில் இருந்து வருகிற டிராம் வண்டி எங்கள் வீட்டுக்குமுன்னால் நிற்கும். அநேக வேளைகளில் அதிலிருந்து அப்பா மட்டும்தான் இறங்குவார். கும்பல் கிடையாது. எனக்கு முன்னும் பின்னுமாய் மூன்று சகோதரிகள். நான் வீட்டுக்கு ஒரே ஆண்மகன். இருந்தாலும் என்னைத்தனியாக வெளியே போக அனுமதிக்க மாட்டார்கள். மிஞ்சி மிஞ்சி போனால் கோயிலுக்கு போய் வர அனுமதி கிடைக்கும். அதுவும் எப்படி? அக்காவின் துணையோடு. மற்றபடி என் வயசு பிள்ளைகள் மாதிரி கோலி விளையாடவோ, காத்தாடி விடவோ நான் செஞ்சது இல்லை. பள்ளிக்கூடம் விட்டால் வீடு.... வீடுவிட்டால் கோயில் என்று செக்குமாடுபோலச் சுழன்று கொண்டிருந்தாலும் என்னுள் புதைந்து இருந்த கலைஉணர்வுக்கு இதனால் பங்கம் வந்து விடவில்லை. மயிலை கோயிலின்வாகனங்களும் அவற்றில் செதுக்கியிருந்த வேலைப்பாடுகளும் என்னை பிரமிப்படைய வைத்திருக்கின்றன.

ஒருமுறை அதிகார நந்தி வாகனத்தில் ஸ்தபதி ஒருவர் சில்வர் பேப்பர் ஒட்டி வேலை செய்து கொண்டிருக்க... அதை நான் முழுக்க நின்று வாய்பிளந்துவேடிக்கை பார்த்து வீட்டில் வசவு வாங்கி இருக்கிறேன். என் வகுப்புத் தோழன் ஒருவனின் அப்பா மரப்பொம்மைகள் செய்வார். அவரோடு உட்கார்ந்து மரத்தைக் கொண்டு பீர்க்கங்காய் செய்தது தான்என்னுடைய முதல் கலை வெளிப்பாடு.எனக்கு வரைவதில் உள்ள ஈடுபாட்டைஎனது பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியரும் பிரபல தமிழ் அறிஞருமான சீனி வேங்கடசாமி அறிந்தபோது “நீஓவியக் கல்லூரியில் சேருடா.அதுதான்உனக்கு நல்லது” என்றார். ‘ஓவியக்கல்லூரியா.... அது எங்கேஇருக்கும் ? அதில் ஸீட்டுக் கிடைக்குணுமானா என்ன தகுதி வேண்டும் ?’- ஒன்றும் தெரியாமல் குழம்பிக்கொண்டிருந்தேன். இதற்கிடையே என் அக்காவுக்குத் திருமணமாகியது. எங்கள் வீட்டுக்கு மாப்பிள்ளையாக மாமா லொகியா வந்தார். என் ஆசையை அவரிடம் சொன்னபோது, “அந்தக் காலேஜ்ல இடம்பிடிக்கணும்னா உனக்குக் கொஞ்சமாவது வரையத்தெரியணுமே ! ” என்றார். சட்டென்றுமுகம் சுருங்கியது எனக்கு கவலைப்படாதே நான் ஒரு இடத்திலே உன்னை கொண்டு போய் விடுறன் அங்கே நீ ஓவியம் வரைவதற்கான அரிச்சுவடி பறிச்சுக்கலாம் உற்சாகமாய் மாமாவுடன் போனேன் மாமா கொண்டு போய் விட்ட இடம் சென்னைபிராட்வேயில் முன்பிருந்த ரத்னா அண்ட் கோ. அது ஒரு போட்டோ ஸ்டூடியோ. அந்த போட்டோ ஸ்டுடியோவில் அந்தக்கால மகாராஜாக்களின் பிரம்மாண்ட ஆயில் பெயின்டிங் படங்கள் மாட்டப்பட்டிருந்தன. அதைப்பார்த்து தான் நான் அங்கே ஓவியம் பயில முடியும் என்று என் மாமா நினைத்திருந்தார்போலும். அங்கே சென்றதும் என்னை ஏற இறங்க பார்த்தபோட்டோ ஸ்டூடியோ முதலாளி ஒருபோட்டோவை எடுத்து என்னிடம் கொடுத்தார்.


பிறகு டச் பண்ணி குடுஎன்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. படத்துல அங்கங்கே ஓட்டை ஓட்டையாக புள்ளி இருக்கு இல்ல. கரெக்ட் பண்ணு என்று சொல்லி கையில் பிரஷையும் திணித்து விட்டார்.படத்துக்குத் தக்கவாறு டச் பண்ண வேண்டும் என்பது தெரியாமல் நான் கன்னாபின்னாவென்று கருப்படித்து ஓட்டையை அடைத்தேன். முகம் சுளித்த முதலாளி பையனை வேணும்னா டார்க் ரூம்ல விட்டுப் பார்க்கலாம். நாளைக்கு வரச்சொல்லுங்க என்றார் என் மாமாவிடம். ரெண்டு பேரும் வீடு திரும்புகையில் இருட்டு அறைக்குள் என்ன வேலை கொடுப்பார்கள் என்று எனக்கு கவலையாக இருந்தது. மறுநாள் நான் வேலைக்கு கிளம்பவேண்டும். துணிவை வரவழைத்துக்கொண்டு மாமாவிடம் நான் டார்க் ரூம் வேலைக்கு எல்லாம் போக மாட்டேன் .அங்கேயெல்லாம் வரைய முடியாது என்றேன். மாமா ஒன்றும் சொல்லவில்லை அடுத்து வேறு ஒருவரிடம் கூட்டிப்போனார். அதுவும் ஒரு போட்டோ ஸ்டூடியோதான்.  அங்கேயும் அதே வேலைதான் கொடுத்தார்கள். பிறகு அங்கிருந்து இன்னொரு போட்டோ ஸ்டூடியோ. மூன்றாவது போட்டோ ஸ்டூடியோ முதலாளி லோகநாதன் . சற்று சுவாரசியமான மனிதர். ஓவியம் வரைய தெரிந்தவர். லோகநாதன் முதலாளியிடம் நான் சில மாதங்கள் நிலைத்து வேலை பார்த்ததற்குக் காரணம் அவரது தமாஷான குணம் மற்றும் போதிய திறமை தான். அவரிடம் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் எனது ஏரியாவாசியும் நண்பருமான சி. பாலனை நான் எதேச்சையாக சந்திக்கநேர்ந்தது. நான் போட்டோ ஸ்டுடியோவில் வேலை பார்த்ததை கேட்டதும் திகைத்துப் போனான் பாலன். ஓவியம் பயில இது சரியான வழியில்லை. கோவிந்தராஜூ நாயக்கர் என்றொரு ஓவியர் இருக்கிறார். அவர் கிட்ட கூட்டிப்போறேன். அங்கே போய் பிராக்டீஸ் பண்ணு என்று என் கண்களைத் திறந்தான். கோவிந்தராஜூ நாயக்கர் சென்னைஓவியம் மற்றும் சிற்பக் கல்லூரியில் படித்தவர். அவரிடம் நான் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் ஓவியம்பயின்றேன். அதன் விளைவாய் ஓவியக்கல்லூரியில் நுழைவதற்கான தகுதி தேர்வு எழுத நான் அழைக்கப்பட்டேன். அப்போதெல்லாம் தொடர்ந்து 10 நாட்களுக்கு நடைபெறும்.10 நாட்களில் எங்கள் ஓவியத்திறமையை பேப்பரில் கொட்ட வேண்டும். பத்தாம்நாள் முடிவில்தான் ரிசல்ட் வரும் அதன்படி நான் முதல் கட்டத்தில்வெற்றிபெற புகழ்பெற்ற ஓவிய கல்லூரி என்னை வாரி அணைத்துக் கொண்டது. (தொடர்ச்சி அடுத்தவாரம்)