சென்னை, மே 16-தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் மீது பணி நீக்க நடவடிக்கை உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல், ஆசிரியர்களாக பணியாற்றி வருபவர்களுக்கு விளக் கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி, அவர்களிடம் விளக்கம் பெற்று, சட்டப்படி தகுந்த உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய் யப்பட்டன. அதில் தகுதித் தேர்வு அறிமுகப்படுத்தி 9 ஆண்டுகளில், ஆண்டுக்கு இரண்டு முறை என 18 தேர்வுகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக தெளிவான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு சார்பில் தேசிய அளவில் ஆண்டுக்கு இரு முறை தகுதித் தேர்வு நடத்தப்பட்டாலும், அந்த தேர்வில் தமிழக ஆசிரியர்களால் கலந்து கொள்ளமுடியாது. இதை தனி நீதிபதி கவனிக்க தவறிவிட்ட தால் அவரது உத்தரவை ரத்து செய்ய வேண் டும் என மேல்முறையீட்டில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.இந்த வழக்கை விசாரித்த, நீதிபதிகள் கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய விடுமுறைக் கால சிறப்பு அமர்வு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு விளக்கம் கோரி தமிழக அரசு அனுப்பிய நோட்டீஸ் மீது எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என ஆணையிட்டனர்.வரும் ஜூன் மாதம் நடைபெறக்கூடிய தகுதித் தேர்வில் ஆசிரியர்கள் பங்கேற்க வேண் டும் என்றும், அதுவரை அவர் கள் மீது பணி நீக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை ஜூன் இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைக்கப் பட்டது.