சென்னை, ஜுன் 25- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும், அனைத்துக் கிராமங்களிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று (ஜூன் 25) மனு அளிக்கும் போராட்டம் தமிழகம் முழுவதும் ஊராட்சி ஒன்றி யங்களில் நடைபெற்றது. இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள் ஆவேசத்துடன் பங்கேற்றனர். தேர்தல் நாளன்று (ஏப்ரல் 18) விவசாயத் தொழிலாளர்கள் வாக்களிப்பதை உறுதிப்படுத் தும் வகையில், ஊரக வளர்ச்சித்துறை நூறுநாள் வேலைத் தொழிலாளர்களுக்கு விடுப்புடன் கூடிய ஊதியத்தை அறிவித்ததை அனைத்து அட்டை தாரர்களுக்கும் வழங்க வேண்டும், சட்டக்கூலி ரூ.229ஐ குறைக்காமல் முழுமையாக வழங்க வேண்டும், சுழற்சி முறையில் வேலை கொடுப்ப தை தவிர்த்து அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள அனைத்து, வேலை அட்டை பெற்றுள்ள தொழிலா ளர்களுக்கும் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் வறட்சி பாதித்த மாவட்டங்களாக மத்திய, மாநில அரசுகள் உடனே அறிவித்து நிவாரணப் பணிகளை துவங்க வேண்டும், அனைத்து ஊராட்சிக் குடியிருப்புப் பகுதிகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், 100 நாள் திட்ட வேலை நாட்களை 150 நாட்களாகவும், சட்டக்கூலியை ரூ.400 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும், கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் அரசு அறிவித்த 2 லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்தை உடனே துவங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. 31 மாவட்டங்களில் 185 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெற்ற இப்போராட்டத் தில் 32 ஆயிரம் பெண்கள் உட்பட 40 ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டம் மதுரை மேற்கு - கிழக்கு ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத் தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாநிலப் பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் திருவாரூர் ஒன்றியத்தில் நடைபெற்ற போராட்டத்திலும், மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர் நாகை ஒன்றியத்திலும் கலந்து கொண்டார்கள்.