சென்னை:
தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் சென்னை, நாகை உள்ளிட்ட இடங்களில் ஜூலை 13 அன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்..
சமீபத்தில் இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் நிகழ்ந்த தற்கொலை படை தாக்குதலில், 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த குண்டு வெடிப்புக்கு ஆதரவு தெரிவித்து, தமிழகத்தில் சிலர் சமூகவலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டிருந்தனர். இவர்களுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் தேசிய புலனாய்வு முகமை, ஜூன் மாதம் 12 ஆம் தேதி கோவையில் 7 இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அல்கொய்தா அமைப்புடன் வஹாதத் இஸ்லாம் அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகித்து, கொச்சியில் இருந்து வந்த தேசிய புலனாய்வு முகமையானது எஸ்.பி. ராகுல் தலைமையில் சனிக்கிழமையன்று தமிழகத்தில் நான்கு இடங்களில் சோதனை நடத்தினர்.சென்னை மண்ணடி லிங்கி செட்டி தெருவில் உள்ள வஹாதத் இஸ்லாமிக் ஹிண்ட் என்ற அமைப்பின் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், ஹார்ட் டிஸ்க் மற்றும் சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, தாஜூதீன் மற்றும் இஸ்மாயில் ஆகியோருக்கு என்ஐஏ அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். கிண்டியில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் சனிக்கிழமையன்று மாலை ஆஜராகும்படி இருவருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புகளின் அலுவலகங்களிலும், புரசைவாக்கத்தில் இஸ்லாமிய அமைப்பின் மாநில தலைவரான முகமது புகாரி என்பவரது வீட்டிலும் தேசிய புலனாய் முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.நாகை மாவட்டம் மஞ்சக்கொல்லை ஹாரிஷ் முகமது, அசன் அலி என்பவரது வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை மேற்கொண்டனர்.