tamilnadu

img

நந்தினி, ஆனந்தன் கைது: விடுதலை செய்ய சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மது ஒழிப்பு போராட்டம் உட்பட மிக முக்கியமான போராட்டங்களை நடத்தி வரும் மக்கள் மீது தொடர்ந்து தமிழக அரசு அடுக்கடுக்கான வழக்குகளை தொடுத்து ஜாமீனில் வெளி வராதபடி பதிவு செய்வது, கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. மிக அத்யாவசியமான பிரச்சனைகளின் மீது போராட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதன் ஒருபகுதியாக, மது ஒழிப்பை வலியுறுத்தியும், தேர்தலில் வாக்குச் சீட்டு முறையை கொண்டு வர வலியுறுத்தியும் தொடர்ந்து போராடிவரும் நந்தினியும், அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். நீதிமன்றத்தில் ‘மது உணவுப்பொருளா’ என்ற கேள்வியை அவர் எழுப்பியிருக்கிறார். இதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட்டுள்ளது. தமிழகத்தில் மது ஒழிப்புக்காக பல்வேறு இயக்கங்களும் குரல் கொடுத்து வருகின்றன. மது உணவுப்பொருளா என்ற கேள்வி, சமூகத்தில் நிலவுகின்ற ஒன்றே.நந்தினி திருமணம் வரும் ஜூலை 5 ஆம் தேதி நடக்கவுள்ள சூழலில், அவரை கைது செய்திருப்பது மிகுந்த வேதனை தருகிறது. தமிழக அரசு உடனடியாக அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில்  வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். மேலும் இவ்வாறு சமூக அக்கறையுடன் போராடுபவர்கள் மீது வழக்கு தொடுப்பது, கைது செய்து சிறையில் அடைப்பது தமிழகத்தில் அமைதியற்ற சூழலுக்கே வழிவகுக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.