tamilnadu

img

நாகை மாலி கடும் எதிர்ப்பு... பின் வாங்கிய காங். எம்எல்ஏ....

சென்னை:
சட்டப்பேரவையில் வியாழனன்று(செப்.2) மக்கள் நல்வாழ்வு மற்றும் குறு,சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. கொரோனா பெருந் தொற்றை எதிர்க்கொள்ளும் கேரள அரசு குறித்து காங்கிரஸ் உறுப்பினர் ஜெ.ஜெ.பிரின்ஸ் ஒரு கருத்தை கூறினார்.

அப்போது குறுக்கிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் வி.பி.நாகைமாலி, “தமிழ்நாட்டில் கொரோனா என்கிற அந்த பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு நமது மாநில முதலமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சரும் கடுமையாக போராடினர். அதன் மூலம் அந்த தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார் கள்” என்றார்.அதேபோல், கேரளா மாநிலத்தில் அந்த அரசாங்கமும் கொரோனா நோயை கட்டுக்குள் கொண்டு வந்தது. தற்போது கடுமையாக போராடிக் கொண்டிருந்தாலும் மிக சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறது. அதுபோன்றுதான் தமிழ்நாடு அரசின் பணியும் சிறப்பாக இருக்கிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி உறுப்பினர் தெரிவித்த கருத்தும் நோக்கமும் சரியானது அல்ல. அது தவறானது. நமது சட்டமன்றத்தில் பேசும்போது மற்ற மாநிலங்கள் பற்றி பேசுவது சபை மரபுக்கு ஏற்றதல்ல. எனவே, அவை குறிப்பில் இருந்து நீக்கம் வேண்டும் என்றும் வலியுறுத்தினார். (அவை முன்னவர் துரைமுருகன் தலையீட்டைத் தொடர்ந்து பிரின்ஸ் பேசியதை பேரவைத் துணைத் தலைவர் கு.பிச் சாண்டி நீக்கினார்)தொடர்ந்து பேசிய பிரின்ஸ், “கேரளா மாநில முதல்வர் பினராயி கம்யூனிஸ்டாக இருந்தாலும் அவர் எனக்கும் நண்பர்தான். அவர் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார். அதில் மாற்று கருத்துக்கே இடம் இல்லை” என்றும் புகழாரம் சூட்டினார்.