சென்னையில் 20,000 சதுரடியில் இசை மற்றும் நடன அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனத் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.
சுற்றுலாத் துறையில் தமிழ்நாட்டை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்ட “தமிழ்நாடு சுற்றுலா கொள்கை – 2023”யை அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார்.
தமிழ்நாடு சுற்றுலா கொள்கை- 2023-இல் 5 ஆண்டுகளில் ரூ. 20,000 கோடி முதலீட்டில் பல்வேறு சுற்றுலா திட்டங்களை தமிழக அரசு வகுத்துள்ளது.
அவற்றுள் ஒன்றாக கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்தும் வகையிலும், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கலைகள், நடனம் மற்றும் இசை வடிவங்களைக் காட்சிப்படுத்தும் ஊடகமாக இந்த அருங்காட்சியகம் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் கலை வடிவங்களை மேம்படுத்துவதற்காக செயல்திறன் இடங்கள், கலைக்கூடங்கள் மற்றும் பட்டறைகள் அமைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தமிழ் சினிமா வரலாறு, பிரபல நடிகர்களை வெளிப்படுத்தும் வகையில் கோலிவுட் கேலரியும் இந்த கலை அருங்காட்சியகத்தில் அமைய உள்ளது.