tamilnadu

தமிழக அரசை வஞ்சிக்கும் மோடி அரசு.. உதயநிதி...

கடந்த அதிமுக அரசு ஒருபுறம் மாநிலத்தை சீரழித்தது என்றால், மற்றொருபுறம் ஒன்றிய அரசும் தமிழ்நாட்டை வஞ்சித்தது. 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தல்களில் பாஜக அசுர பலத்துடன் அதாவது மிகப்பெரிய பெரும்பான்மையுடன் ஆட்சி பொறுப்பில் அமர்ந்தது. அப்படியென்றால் அந்த அரசு எவ்வளவு பெருந்தன்மையாக நடந்து கொண்டிருக்க வேண்டும்? ஆனால், அப்படி நடக்கிறதா என்றால் இல்லை பணமதிப்பிழப்பு நடவடிக்கையால்  ஏழை – எளிய மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோனது.இன்றுவரை அது சரியாகவில்லை. ஜி.எஸ்.டி-யை அமல்படுத்தியதால் நாட்டின் பொருளாதாரம் அதாள பாதாளத்தில் விழுந்துள்ளது. தமிழ்நாட்டுக்கு ரூ.15,475 கோடி அளவு ஜி.எஸ்.டி பாக்கி ஒன்றிய அரசிடமிருந்து வர வேண்டியுள்ளது.

இது இப்படி என்றால், மாநிலத்துக்கு பல ஆண்டுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட மதுரை ‘எய்ம்ஸ் மருத்துவமனைக்கு’ ஒற்றை செங்கல் நட்டு வைத்ததோடு அப்படியே உள்ளது. இதனை பிரச்சாரத்தின் போது நான் சுட்டிக்காட்டி பேசினேன். இந்த பிரச்சனை தமிழ்நாட்டின் சாமானிய மக்களுக்கும் புரிந்திருக்கிறது. அதனால் தான் திருச்சியில் உள்ள செங்கல் சூளை ஒன்றிற்கு ‘எய்ம்ஸ் பிரிக்ஸ்’ என பெயர் சூட்டியுள்ளனர். எய்ம்ஸ் பிரச்சனை இங்கு மட்டுமில்லை. நாடு முழுவதும் இருக்கிறது என்பதற்கு பீகார் பிரச்சினையே சான்று.

பாஜக அரசை வேகமாக விமர்சிப்போம்!
குளறுபடிகளால் மாநிலத்தின் நிதி நிலை எந்த அளவில் சீர்குலைந்து உள்ளது என்பதை நிதியமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கை தெளிவாக எடுத்துக்கூறியிருந்தது. ஒன்றிய அரசின் மீது எங்களுக்கு எந்த காழ்ப்புணர்வும் இல்லை. நல்லது செய்தால் ஏற்கவும் பாராட்டவும் தயாராகவுள்ளோம். ஆனால், தவறிழைக்கும் பட்சத்தில் முன்பைவிட இன்னும் வேகமாக அதனை சுட்டிக்காட்டுவோம் விமர்சிப்போம். முதலமைச்சர், எங்களை கண்ணியமாகத்தான் நடந்துகொள்ள சொல்லியிருக்கிறார். அடிமையாக இருக்க சொல்லவில்லை.

பாரம்பரிய நிறுவனங்களை தாரைவார்க்கும் மோடி அரசு!
ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பாரம்பரியமிக்க நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதும் தொடர்கிறது. விமான நிலையம், ரயில்வே, பெட்ரோலியம்.. ஏன் ராணுவத்தில் கூட தனியார் முதலீடுகளும் தனியார்மயமும் தொடர்கின்றன.
விமானம் நிலையம், ரயில் சேவையெல்லாம் தனியார் வசம் உள்ளது போல் ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை காட்சி வைக்கப்பட்டிருக்கும். ஆனால், அந்த நகைச்சுவையை இன்று நம் கண் முன்னே ஒன்றிய அரசு நடத்திக்காட்டுகிறது. ஒன்றிய, மாநில அரசுகள் இவ்வாறு செயல்பட்டதால் ஏற்பட்ட இழப்புகள் ஏராளம்.

பேரழிவும்-மூடநம்பிக்கையும்
கொரோனாவை அறிவியல் பூர்வமாக கட்டுப்படுத்துவதற்கு இந்திய ஒன்றிய பாஜக அரசும் பிரதமர் மோடியும் தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல், கைதட்டுங்கள், மணி அடியுங்கள், விளக்கேற்றுங்கள் என மூட நம்பிக்கை வழியே அணுகியதன் காரணத்தால் தான் கொரோனா பேரழிவு ஏற்பட்டது.ஒன்றிய அரசு எதை சொன்னாலும், அதை அப்படியே பின்பற்றும் அதிமுகவினர், மணி அடித்து, விளக்கு ஏற்றி, கைதட்டியதன் விளைவே தமிழ்நாட்டில் கொரோனா கட்டுக்குள் வராமல் போனதற்கு காரணமாக அமைந்தது.தமிழ்நாடு முழுவதும் இதுவரை அரசு மருத்துவமனைகளில் 2 கோடியே 70 லட்சத்து 30 ஆயிரத்து 337 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இப்படி ஒன்றிய அரசிடம் போராடி தடுப்பூசிகளை பெற்று மக்களுக்கு தடுப்பூசியிடும் பணிகள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெறுகின்றன. இன்னொரு அலை நிச்சயம் வரக்கூடாது. அப்படி வந்தாலும் தற்காத்துக்கொள்ள பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். முக்கியமாக, அரசு காட்டிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அனைவரும் பொறுப்புடன் செயல்பட்டு மூன்றாவது அலையை தடுப்போம்.

முதல்வருக்கு துணை நிற்பேன்!
என் தொகுதி மக்களின் உரிமைக் குரலாய் ஒலிப்பேன். தமிழ்நாடு அனைத்து துறையிலும் சிறந்து விளங்க அயராது பாடுபடும் நம் முதல்வருக்குத் துணை நின்று உழைப்பேன்.