சென்னை,ஜன.5 உள்ளாட்சித் தேர்தலில் திருவண்ணாமலை, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங் களில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்க தடை விதிக்கக் கோரியும், இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் தி.மு.க. வழக்கறிஞர் நீலகண்டன் உள்ளிட்ட சில வழக்கறி ஞர்கள் ஞாயிறன்று (ஜன.5) சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட்டனர். அப்போது, தலைமை நீதிபதி வீட்டில் இல்லாததால் சம்பந்தப்பட்ட நீதிபதியிடம் முறையிடுமாறு அதிகாரிகள் கூறினர்.இதைத்தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு வீட்டிற்கு சென்று அவரிடம் இதே கோரிக்கையை வலியுறுத்தி முறையிட்டனர்.அவர் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அவசர வழக்கு களை விசாரித்து வரும் நீதிபதி சத்திய நாராயணா விடம் முறையிடுமாறு அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து வழக்கறிஞர்கள் நீதிபதி சத்திய நாராயணாவிடம் முறையிட்டனர். அவர் ஞாயிறன்று விடுமுறை நாள் என்பதால் தலைமை நீதிபதி ஒப்புதல் இல்லாமல் இதனை அவசர வழக்காக விசாரிக்க முடியாது. எனவே, திங்கட்கிழமை(ஜன.6) நீதிமன்றத்தில் வந்து முறை யிடுமாறு கூறினார். இதையடுத்து திமுக வழக்கறிஞர்கள் திங்களன்று நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்க முறை யிடுவதாகக் கூறிவிட்டு சென்றனர்.