கோவையில் உள்ள ஜக்கி வாசுதேவுக்கு சொந்தமான ஈஷா யோகா மையத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஆதியோகி சிலை மற்றும் கட்டடங்களுக்கு எவ்வித அனுமதியோ, தடையின்மை சான்றோ பெறவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கோவை வெள்ளியங்கிரி மலை பழங்குடியின பாதுகாப்பு சங்க தலைவர் முத்தம்மாள், 2017 ஆம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஈஷா யோகா மையத்திக் விதி மீறல்கள் குறித்து வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதில், கோவை வெள்ளிங்கிரி மலை அடிவாரப்பகுதியில், பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் கட்டங்களை கட்டியுள்ளது. யானை உள்ளிட்ட வன விலங்குகளின் வலசை பாதையை மறித்து கட்டங்கள் எழுப்பி வனவிலங்குகளின் நடமாட்டத்தை சீர்குலைத்துள்ளனர். மேலும், ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆதியோகி சிலையை மையப்படுத்தி தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இது இப்பகுதியில் இயற்கையை சீர்குலைப்பதோடு, பழங்குடியின மக்களின் வாழ்வாதாரமும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது என தெரிவித்திருந்தார்.
இவ்வழக்கில், இன்று தமிழக அரசின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிரமாண பத்திரத்தில் கட்டிடங்கள் கட்டுவதற்கான உரிய அனுமதி பெறவில்லை எனவும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மலைகள் பிரதேச பாதுகாப்பு ஆணையம், தீயணைப்புத்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் இருந்து தடையில்லா சான்று பெறவில்லை, கிராம ஊராட்சியும் அனுமதி வழங்கவில்லை எனவும் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதை அடுத்து, கட்டங்கள் அமைக்க பெறப்பட்ட ஆவணங்களை 2 வாரங்களுக்குள் ஈஷா மையம் அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும்படிக்கு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.