tamilnadu

img

உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்கும் கணவன்-மனைவி...

சென்னை:
இந்திய நீதித்துறை வரலாற்றில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக கணவன்-மனைவி ஒரே நேரத்தில் பதவி ஏற்க உள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வரும் 10 மாவட்ட முதன்மை நீதிபதிகளை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க, உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இவர்களை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் விரைவில் உத்தரவு பிறப்பிக்க உள்ளார்.ஆனால்,  சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகள் கிடைத்துள்ளது மகிழ்ச்சியான சம்பவமாக இருந்தாலும், இதில் கூடுதல் மகிழ்ச்சி என்னவென்றால் 10 பேரில் இருவர் கணவன்-மனைவி என்பது தான். இந்த 10 பேரில் நீதிபதிகள் கே.முரளிசங்கர், எஸ்.டி.தமிழ்செல்வி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் கணவன்-மனைவி ஆவர்.இருவரும் 1968 ஆம் ஆண்டு பிறந்தவர்கள். சட்டப்படிப்பை முடித்து 1995 ஆம் ஆண்டு மாஜிஸ்திரேட்டு பதவிக்கு தேர்வு செய்யப்பட்டனர். தற்போது பதவி உயர்வு பெற்று மாவட்ட முதன்மை நீதிபதியாக உள்ளனர்.கோவை மாவட்டத்தை சேர்ந்த நீதிபதி கே.முரளிசங்கர், 1985-1990 ஆம் ஆண்டு கோவை அரசு சட்டக்கல்லூரியில் படித்தார். சட்டப்படிப்பை முடித்து விட்டு, கோவையில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். அதேபோல ஈரோடு மாவட்டம், பெருந்துறையை சேர்ந்த நீதிபதி எஸ்.டி.தமிழ்செல்வி, புதுச்சேரி சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். இருவரும் ஒரே நேரத்தில் மாஜிஸ்திரேட்டாக தேர்வு செய்யப்பட்டு பயிற்சி பெற்றனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்து, 1996 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதியாக கே.முரளிசங்கரும், சென்னை உயர்நீதிமன்றக் மதுரை கிளையில் நீதித்துறை பதிவாளராக நீதிபதி எஸ்.டி.தமிழ் செல்வியும் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகள் சட்டப்படிப்பை படித்து வருகிறார். இந்திய நீதித்துறை வரலாற்றில் கீழ்  நீதிபதிகளாக இருக்கும் கணவன், மனைவி ஒன்றாக நீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்க உள்ளது இதுவே முதல் முறையாகும்.