tamilnadu

img

சட்டவிரோதமாக எந்திரங்களின் மூலம் நூறுநாள் வேலைகள் நடத்தப்படுகிறது... பெரம்பலூர் அருகே ஜேசிபி எந்திரம் இடித்து பெண் தொழிலாளி மரணம்...

சென்னை:
பெரம்பலூர் மாவட்டம் திம்மூரில் மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தின் கீழ் செய்யப்பட வேண்டிய வேலையை சட்டவிரோதமாக செய்ததோடு மட்டுமின்றி, இப்பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஜேசிபி இயந்திரம் மோதி ஒரு பெண் தொழிலாளி பலியாகியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்து அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர், மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:நூறு நாள் வேலைத்திட்டங்களை எந்திரங்களை வைத்து வேலை செய்யக்கூடாது. மனித உழைப்பின் மூலமே வேலை செய்ய வேண்டும் என்று சட்டம்கூறுகிறது. ஆனால், சட்டவிரோத காரியங்களை அதிகாரிகளும் ஆளுங்கட்சியினரும் தொடர்ந்து இந்திய நாடு முழுவதும் தொடர்ச்சியாக செய்து வருகின்றனர். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் இதைத் தொடர்ந்து எதிர்த்துப் போராடிக் கொண்டே இருக்கிறது. மத்திய - மாநில அரசுகள் சட்டத்தை அமல்படுத்த வேண்டியவர்கள், இதை மறைத்து மறைமுகமாக ஆதரித்து வருகிறார்கள்.  

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம் திம்மூர் பஞ்சாயத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கசிவுநீர்குட்டைப் பணியை நூறு நாள்வேலையின் கீழ் என்ற பெயரில்கடந்த 15 நாட்களாக எந்திரங்களைக் கொண்டு செய்து வந்துள்ளனர். இதில் பஞ்சாயத்து கிளர்க்கும், ஆளுங்கட்சியினருமே கதாநாயகர்களாக இருந்துள்ளனர். இவர்கள் அவ்வூர் நூறு நாள் வேலைத்திட்ட பணியாளர்களின் வேலை அட்டைகளையும், வங்கிஏடிஎம் கார்டுகளையும் வாங்கிக் கொண்டு 100 பேர் , 200 பேர் வேலை செய்தது போல், பதிவு செய்து கொண்டு அவர்களை வேலைத்தளத்தில் வைத்து போட்டோ எடுத்துக் கொண்டு அனுப்பி விடுவார்கள். அவர்களுடைய வங்கிக் கணக்கில் ஏறுகிற பணத்தை ஏடிஎம் கார்டுகள் மூலமாக எடுத்துக் கொள்வார்கள். தொழிலாளிகளுக்கு தலா ரூ.50, 100 கொடுத்துவிட்டு, பாக்கி பணத்தை பஞ்சாயத்து கிளர்க் மற்றும் ஆளுங்கட்சி பொறுப்பாளர்கள், ஒப்பந்தகாரர் (இவரும் ஆளுங்கட்சிக்காரர்தான்) லட்சக்கணக் கான ரூபாய் பணத்தை சுருட்டிக் கொள்வார்கள். இதுதான் திம்மூரில் நடந்துள்ளது.

இந்நிலையில், திம்மூரில் செப்டம்பர் 16 ஆம் தேதி பெண்களை வேலைத்தளத்தில் நிறுத்தி போட்டோ எடுக்கும் போது, பின்னால் இருந்த ஜேசிபி எந்திரம்இடித்து, ஜெயலெட்சுமி என்ற பெண் தொழிலாளி மரணமடைந்துள்ளார். தகவல் அறிந்து அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகளும், மாவட்ட நிர்வாகிகளும் ஊர் மக்களிடம் விவரங்களை விசாரித்து அவ்வூர் மக்களைத் திரட்டிச்சென்று சட்ட விரோதமான காரியத்தில்ஈடுபட்டவர்களை கைது செய்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும்; இறந்து போன பெண் தொழிலாளியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து செப்.19 ஆம் தேதி  மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், மாநிலச்செயலாளர் அ.பழனிச்சாமி, மாநிலக்குழு உறுப்பினர் சந்திரன், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ரமேஷ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. 

வழக்கம்போல அதிகாரிகள் நிவாரணத்திற்கு சிபாரிசு செய்கிறோம், குற்றவாளிகளின் மீது நடவடிக்கை எடுக்கிறோம் என்று வாக்குறுதி அளித்தனர். நாடு முழுவதும் இந்தத் திட்டத்தில்தவறு செய்வார்கள். சிக்கிக்கொண்டால்வாக்குறுதியைக் கொடுத்து தப்பித்துக்கொள்வார்கள்.  சட்டத்தை அமல்படுத்த வேண்டியவர்களே, சட்டத்தை மீறுவார்கள். சட்டத்தை அமல்படுத்த வேண்டிய மத்திய-மாநில அரசுகள் இதை கண்டு கொள்ளாமல் இருக்கிற நிலை தொடர்வதை, ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இது கொரோனா காலம், தேசம் முழுவதும் இருக்கிறகோடிக்கணக்கான கூலித் தொழி லாளிகளுக்கு ஊரடங்கினால் மறுக்கப்பட்ட பணிகள், நாடு முழுவதும் நடந்த போராட்டத்தினால் இப்பொழுது தான், நூறு நாள் வேலைத்திட்டப் பணிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. வேலையும் ஓரளவு வருவாயும் கிடைக்கக் கூடிய மக்களின் வாழ்வாதாரமான இந்த திட்டத்தை சுயநலப் பேர்வழிகள் தங்கள் சுயநலத்திற்காக அழிக்க முயல்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக்குழு இதற்கு வன்மையாக கண்டனத்தை தெரிவிக்கிறது. இறந்து போன நூறு நாள்வேலைத்திட்ட பணியாளர் ஜெய லட்சுமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்நிவாரணம் வழங்க வேண்டும். சட்டவிரோதமான காரியத்தில் ஈடுபட்ட அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும்.