tamilnadu

img

விவசாய கடன் வழங்குக... ஜுலை 17-ல் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

சென்னை:
விவசாயத்திற்கு கடன் வழங்கக்கோரி ஜுலை 17 அன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்த ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து குறித்த காலத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு விவசாயிகளும் மகிழ்ச்சியுடன் பணிகளை துவக்கினர். அந்த மகிழ்ச்சியில் மண்அள்ளி போடும் வகையில் கூட்டுறவு வங்கிகள் பயிர்க்கடன் மற்றும் நகைக்கடன் தர மறுத்துவருகின்றன. கடந்த காலத்தில் வாங்கிய கடனை கட்டவில்லை என்றும் கூடுதல் கடன் விவசாயிகள் பெயரில் இருக்கிறது என்ற காரணத்தைக் கூறி கடன் தர மறுக்கின்றன. இதனால் தண்ணீர் திறக்கப்பட்டும் வேளாண்மைப் பணிகளை தொடர முடியாமல் விவசாயிகள் திகைத்து நிற்கின்றனர். அதிலும் நகைக்கடன் அனுமதி வழங்கும் அதிகாரம் இப்போது மத்திய கூட்டுறவு வங்கிக்கு மாற்றப்பட்டிருப்பதால் அதுவும் கிடைப்பதற்கு உத்தரவாதமில்லாமல் இருக்கிறது.
விவசாயிகள் பெற்றுள்ள அனைத்துக் கடன்களையும், ஒருமுறை தள்ளுபடி செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்  உட்பட அனைத்து விவசாய சங்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால், விவசாயிகளின் இந்த நியாயமான கோரிக்கைக்கு மத்திய – மாநில அரசுகள் செவி சாய்க்கவில்லை. இந்த நிலையில் பழைய கடன்களை காரணம் காட்டி புதிய கடன் வழங்க மறுப்பது விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.

எனவே, சாகுபடி பணிகள் பாதிக்காத வகையில் நிபந்தனைகளை தளர்த்தி கடன் கோரும் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் வழங்கவும் விவசாய நகைக்கடன் கடந்த காலத்தைப் போலவே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளே வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், ஏற்கனவே விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்து கடனிலிருந்து விவசாயிகளை விடுதலை செய்யுமாறு மத்திய- மாநில அரசுகளை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோருகிறது.மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் ஜுலை 17 ஆம் தேதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். வேளாண் உற்பத்தியை பாதுகாக்கவும், மத்திய- மாநில அரசுகளின் விவசாயிகளின் விரோதப் போக்கை கண்டித்தும் நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.