சென்னை:
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பி.சுகந்தி விடுத்திருக்கும் அறிக்கை:
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்ட மன்றத்தேர்தலில் திமுக வெற்றி பெற்று புதிய அரசை அமைத்திருக்கிறது.தமிழகமுதல்வராக பொறுப்பேற்றுள்ள திரு மு.க ஸ்டாலின் அவர்களுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.திமுக தன் தேர்தல் அறிக்கையில் முன்வைத்த வாக்குறுதிகளில் உடனடியாக நிறைவேற்றியிருக்கும் ஐந்து திட்டங்களும் முக்கியமானவைகள். மக்களின் நலனுக்கானவை. வரவேற்கத்தக்கவை. குறிப்பாக சாதாரண கட்டணப்பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பை ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்கிறது.
இதனால் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு பணிகளுக்கு செல்லும் பெண்கள், குறிப்பாக கட்டுமான தொழிலாளிகள், கடைகளில் பணிபுரியும் பெண்கள், பெரு நிறுவனங்களில் பணிசெய்வோர், தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் உள்ளிட்ட பெண்களுக்கு இது ஒரு சிறந்த திட்டமாகும்.நகரங்களில் மொத்த கடைகளில் இருந்து காய்கறிகள், பழங்கள்,பூக்கள், மீன் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வந்து தலைச்சுமையாக தெருக்களில் விற்பனை செய்யும்பெண்கள், உயர்கல்வி பயிலும் மாணவிகள் என பல்வேறு காரணங்களுக்காக தினமும் பேருந்தில் பயணம் செய்யும் பெண்களுக்கு இத்திட்டம் உதவிகரமாக இருக்கும்.
மேலும் சாதாரண கட்டண பேருந்துகள் மிகவும் குறைவாக இருக்கும் நிலையில் சாதாரண கட்டண பேருந்துகளின் எண்ணிக்கையை உயர்த்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளதும் வரவேற்கத்தக்கது.ஊரடங்கு முடிந்தவுடன் அனைத்து மாவட்டங்களிலும் சாதாரண கட்டண பேருந்துகளை கூடுதலாக இயக்க வேண்டும்என ஜனநாயக மாதர் சங்கம் கோருகிறது.மேலும் திருநங்கைகளும் இத்திட்டத்தில் பயன் பெறுவது குறித்து முதல்வர் அறிவித்திருப்பதும் வரவேற்கத்தக்கது என்று அறிக்கையில் கூறியுள்ளன.