tamilnadu

img

பயிர்க்காப்பீடு திட்டத்தில் பிரிமியம் செலுத்த காலஅவகாசத்தை நீட்டித்திடுக....

சென்னை:
பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் பிரிமியம் செலுத்துவதற்கான காலஅவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் குறுவை சாகுபடிக்கு பிரிமியம் கட்டுவதற்கான காலக்கெடு ஜுலை31 ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. ஆனால் பாதிக்கு மேற்பட்டவிவசாயிகளால் உரிய காலத்திற்குள் பிரிமியம் செலுத்த முடியவில்லை. வழக்கமாக கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன் பெறும் போது பிரிமியம் பிடிக்கப்பட்டுவிடும். ஆனால், இந்த ஆண்டுகடன் பெறுவதற்கான வழிமுறைகளை அரசு மாற்றிவிட்டது. மத்திய கூட்டுறவு வங்கியில்தான் கடன் பெறமுடியும், விவசாய கடன் அட்டைகட்டாயம், ஆதார் எண் இணைக்கப்பட வேண்டுமென்பது போன்ற நிபந்தனைகளால் பெரும்பகுதி விவசாயிகளால் கடன் பெற முடியவில்லை.பொதுமுடக்கம் காரணமாக, போக்குவரத்தும் இல்லாத சூழ்நிலையில் மத்திய கூட்டுறவு வங்கிக்கு விவசாயிகளால்  செல்ல முடியவில்லை. மேலும் ஜுலை 24 முதல் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் பிரிமியம் பெறப்படவில்லை.

இந்த ஆண்டு தஞ்சை, நாகை,திருவாரூர் மாவட்டத்தில் மூன்றரை லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடிசெய்ய அரசு இலக்கு தீர்மானித்துள்ளது. ஆனால், ஜுலை 31 ஆம் தேதிவரை இரண்டு லட்சம் ஏக்கருக்கும் குறைவாகவே பிரிமியம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் உரிய காலத்தில் திறக்கப்பட்டதால் பல புதிய பகுதிகளில் விவசாயிகள் குறுவை சாகுபடிசெய்துள்ளனர். இத்தகைய விவசாயிகள் பிரிமியம் செலுத்த தயாராகஇருந்தாலும் ஏற்க மறுப்பதாக புகார்கள் வந்துள்ளன.எனவே, குறுவை சாகுபடி  செய்துள்ள விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பிரிமியம் செலுத்தும் வகையில் 15 நாட்கள் கால நீட்டிப்பு செய்யப்பட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோருகிறது. அத்துடன், தொடர்ந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு கடன் வழங்கிட அரசு வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.