கடலூர், ஏப்.14-கடலூர் மக்களவை தொகுதியில் மதச் சார்பற்ற கூட்டணியின் சார்பில் திமுக வேட்பாளர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், கடலூர் புதுப்பாளையத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது, “கடந்த மக்களவை தேர்தலுக்கும் தற்போது நடைபெறும் தேர்தலுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. இது, இரு கட்சிகளுக்கோ, வேட்பாளர்களுக்கோ இடையேயான தேர்தல் அல்ல. இரு மாறுபட்ட கொள்கைகளுக்கு இடையேயான தேர்தல்” என்றார்.நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது என்று பாஜக கூறி வருகிறது. இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளிப்பாரா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.திமுக மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிபிஐ மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் டி.மணிவாசகம், சிபிஎம் நகரச் செயலாளர் ஆர்.அமர்நாத், காங்கிரஸ் நகர தலைவர் ஜெ.வேலுச்சாமி மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.