சென்னை:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. கூட்டணிக்கு தலைமை வகித்த திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கிறது. அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராக தேர்ந்தெடுக்க திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் செவ்வாயன்று (மே 4) சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அதிமுக-பாஜக-பாமக கூட்டணியை வீழ்த்தியுள்ளது. தனிப்பெரும் பான்மையுடன் திமுக 125 இடங்களில்வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிஉள்ளது. ஆட்சி அமைக்க 118 இடங்களே போதுமானது.இந்நிலையில், 16 ஆவது சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் செவ்வாய்க் கிழமை மாலை6 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் திமுக சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்படுகிறார்.
அதன் பிறகு, கிண்டி ஆளுநர்மாளிகைக்கு செல்லும் மு.க.ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து சட்டமன்றக் குழுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற் கான கடிதத்தை வழங்குகிறார். அப்போது எந்த தேதியில் பதவி ஏற்பது என்ற விவரம் வெளியிடப்படுகிறது.அநேகமாக வருகிற 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலைஅதிதீவிரமாக தாக்கி வருவதால், பதவியேற்பு விழா மிக எளிமையாக நடைபெறும் என்று தகவல்கள்கூறுகின்றன. இந்த விழாவில் கூட்டணி கட்சித் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படு கிறது.
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் ஆகியோர் திங்களன்று அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.