வந்தவாசி, மே 4-தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் வந்தவாசி கிளை சார்பில் திண்ணை 121 நூல் விமர்சன நிகழ்வுக்கு தமுஎகச மாவட்டக் குழு உறுப்பினர் சாத்தமங்கலம் அண்ணாமலை தலைமை தாங்கினார். வந்தவாசி கிளைத் தலைவர் ரவி முன்னிலை வகித்தார். தமுஎகச நிர்வாகி முனைவர் ஹேமமாலினி வரவேற்றார்.தமுஎகச பெரம்பலூர் மாவட்டச்செயலாளரும் கவிஞருமான செல்வகுமார் எழுதிய ‘ரூபாய் நோட்டில் மிதக்கும் சைபர்’ என்ற நூலை வந்தவாசி கிளை துணைத் தலைவர் பூங்குயில் சிவகுமாரும் செஞ்சி வரலாற்றுப் ஆசிரியரும் கவிஞருமான இயற்கை எழுதிய ‘கடைசி தூரதேசப் பறவையிடம் மன்றாடும் நீர்நிலை’ என்ற கவிதைத் தொகுப்பினை வந்தவாசி கிளைச் செயலாளர் பேராசிரியர் பிரபாகரனும் விமர்சனம் செய்தனர். மனிதனைச் சிதைத்து வரும் தற்போதைய பெரு முதலாளித்துவ சமூகம், சாதிய அரசியல், வர்க்கப் போராட்டம் போன்ற கருத்தாக்கங்கள் நூல்களின் வழி விமர்சிக் கப்பட்டன. தொடர்ந்து மாவட்டத் தலைவர் கவிஞர் ஆரிசன் தமுஎகசவின் தொடர் செயல்பாடுகள் குறித்துப் பேசினார்.கவிஞர்கள் ப. செல்வகுமார், இயற்கை ஆகியோர் ஏற்புரை வழங்கினர். முன்னதாக, கவிஞர்களுக்கு பெட்ரோல் பங்க் உரிமையாளர் பத்மநாபன் சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார். நிறைவாகப் பொருளாளர் முனைவர் மகாலட்சுமி நன்றி கூறினார்.