tamilnadu

img

தலித் இளம்பெண் கொடூர பாலியல் வன்கொலை... போலீஸ் அலட்சியமே காரணம்.... டிஜிபியிடம் கே.பாலகிருஷ்ணன் புகார்

சென்னை:
காஞ்சிபுரம் மாவட்டம், சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த தலித் இளம்பெண் கடத்தப்பட்டு கும்பல் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்துதூக்கில் தொங்கவிடப்பட்ட கொடூர சம்பவத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக காவல்துறை இயக்குநருக்கு வெள்ளியன்று எழுதியுள்ள கடிதம் வருமாறு:
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டம், சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த ரோஜா (வயது 19) ஏழை தலித் குடும்பத்தைச் சார்ந்தவர். 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.வறுமையின் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கம்பெனிக்கு கடந்த நான்குநாட்களாக வேலைக்குச் சென்றுள்ளார். 20.11.2019 அன்று  இரவு வேலைக்கு சென்றவர் மறுநாள் வீடு திரும்பவில்லை. பெற்றோர்கள் மகளை காணவில்லையென்று பலஇடங்களில் தேடிவிட்டு கிடைக்காத நிலையில் 21.11.2019 அன்று காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் உடன் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் மிகவும் அலட்சியப்படுத்தியுள்ளனர். மேற்படி இளம்பெண்ணை கடத்தியவர்கள், கும்பல் பாலியல் வன்முறை செய்து, கொலை செய்து,மரத்தில் தொங்கவிட்டுள்ளனர். பெண்ணை கடத்தியவர்களிடம் போலீஸ் பேசி காவல்நிலையம் வருமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் வராமல் காலம் தாழ்த்தியுள்ளனர்.காணாமல் போன ரோஜா, ஒரு தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் உள்ளதை பார்த்த ஊர் மக்கள் தகவல் தெரிவித்த பின்னரே காவல்துறையினர் ரோஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை நடத்தியுள்ளனர்.

பெற்றோர் புகார் அளித்தவுடனேயே காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் ரோஜாவை காப்பாற்றியிருக்க முடியும். காவல்துறையின் அலட்சியப் போக்கு பல சந்தேகங்களை எழுப்புகிறது.எனவே, தாங்கள் இப்பிரச்சனையில் உட
னடியாக தலையிட்டு, ஏழை தலித் மாணவியை கும்பல் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி, கொலை செய்து மரத்தில்தொங்கவிட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உரிய தண்டனை வழங்கிட வேண்டுமெனவும்; அலட்சியமாக இருந்த காவல்துறையினர் மீது உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும், உயிரிழந்த ரோஜாவின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் அளிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.