tamilnadu

img

வடசென்னை தோழர் செல்லாராம் மறைவுக்கு சிபிஎம் மாநிலச் செயற்குழு செவ்வஞ்சலி....

சென்னை:
வடசென்னை தோழர் செல்லாராம் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு இரங்கல் தெரிவித்துள்ளது.

கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:

ஒன்றுபட்ட சென்னையிலும், வடசென்னை மாவட்டத்திலும் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றிய தோழர் செல்லாராம் ( வயது 81)மறைந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அவரது மறைவுக்கு கட்சியின் மாநில செயற்குழு செவ்வஞ்சலி செலுத்துகிறது.சாதாரண ஏழை மீனவக் குடும்பத்தில் பிறந்தவர் செல்லாராம். முறையான கல்வியறிவு பெறவில்லை என்றாலும் கூட தன்னுடைய சுயமுயற்சியின் காரணமாக ஆங்கிலத்தையும், கணிதத்தையும் கற்றுக்கொண்டது மட்டுமல்ல, பல மாணவர்களுக்கு ஆங்கிலமும், கணிதமும் கற்றுத்தந்து அவர்களை தேர்ச்சிபெற வைத்தவர். மேலும் ஆங்கில இலக்கியங்களை கற்று அதன் உள்ளடக்கத்தை ஆங்கிலத்திலேயே சொல்லும் திறனையும் வளர்த்துக் கொண்டவர். கலை, இலக்கியம், அரசியல், மார்க்சிய சித்தாந்தம் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர். தொழிலாளியாக பணியாற்றி தொழிற்சங்க அனுபவம் பெற்றவர்.

1972 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டவர். கட்சியில் ஆர்வமுடன் பணியாற்றிய அவர் பகுதிக்குழு செயலாளராக, மாவட்டக்குழு உறுப்பினராக, மாவட்ட செயற்குழு உறுப்பினராக பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றியவர். இன்றைய இராயபுரம் பகுதிச்செயலாளர் தோழர் செல்வானந்தம் உள்ளிட்ட பல இளைஞர்களை கட்சிக்குள் கொண்டு வந்தவர் தோழர் செல்லாராம்.தோழர்கள் பி.ஆர்.பரமேஸ்வரன், வி.பி.சிந்தன், ஆகியோரோடு இணைந்துசெயல்பட்டவர். தமிழ்நாடு முற்போக்குஎழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம்உள்பட பல்வேறு அமைப்புகள் வடசென்னை பகுதியில் உருவாக, வளர காரணமாக இருந்தவர். மீனவர்களுக்காக இவர் உருவாக்கிய சிஐடியு சங்கம் இன்று மாநில அமைப்பாக செயல்பட்டு வருகிறது. அவரது மறைவு கட்சிக்கு பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதுடன் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.தோழர் செல்லாராம் குறித்து  தீக்கதிரில் வெளியாகி வரும் ‘களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள்’ தொடரில் கட்சியின்அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்ஜி.ராமகிருஷ்ணன் விரிவாக எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.