சென்னை:
நடிகர் விவேக் மறைவுக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:
திரைப்படங்கள் மூலம் மக்களுக்குபல அரிய முற்போக்கு சிந்தனையான கருத்துக்களை, நகைச்சுவை மூலம்வழங்கி வந்த நடிகர் விவேக் அவர்களுடைய மரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.அவருடைய முற்போக்கு சிந்தனைகாரணமாக ‘சின்ன கலைவாணர்’ என்றுஅழைக்கப்பட்ட விவேக் என்கிற விவேகானந்தன் இருநூறு படங்களுக்கு மேல் நடித்து தன்னுடைய நகைச்சுவை நடிப்பு மூலம் மக்களின் மனங்களைக் கவர்ந்தவர். அவருடைய மறைவு திரைப்படத்துறைக்கு மட்டுமல்லாமல், தமிழ்ச் சமூகத்துக்கு மிகப்பெரிய இழப்பாகும்.
நடிகர் விவேக் திரைப்படத்துறை மட்டுமல்லாது, சமூக ஆர்வலராக பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். ஒருகோடி மரம் நடுவது, சீர்திருத்த கருத்துக்களை, அறிவியல் சிந்தனைகளை பரப்புவது உட்பட பல பிரச்சாரங்களுக்கு அரசும் அவரை பயன்படுத்தியது. சமீபத்தில் அவர், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்என்ற பிரச்சாரத்தில் பொது மருத்துவமனையில் தடுப்பூசி எடுத்துக்கொண்டு, இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஆற்றிய உரை அவருடைய இறுதி உரையாக அமைந்துவிட்டது. மிகக் கடுமையான மாரடைப்பினால் பாதிக்கப் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 17 சனிக்கிழமையன்று அதிகாலை உயிரிழந்திருக்கிறார். அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.அன்னாரை இழந்து வாடக்கூடிய அவர்களது குடும்பத்தினருக்கும், திரைப்படத் துறையினருக்கும், நண்பர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.