சென்னை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது. தொடக்கத்தில் நகரங்களில் வேகமாக பரவிய கொரோனா தற்போது மக்கள் நெருக்கம் இல்லாத கிராம பகுதிகளிலும் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் கொரோனா பாதிப்பு விகிதம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. பாதிப்பு மட்டுமல்லாமல் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் தமிழக மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிய உச்சமாக இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 6,988 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தின் மொத்த பாதிப்பு 2 லட்சத்தை (2,06,737) தாண்டியது.
மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 89 பேர் பலியாகிய நிலையில், மொத்த உயிரிழப்பு 3,409 ஆக உயர்ந்துள்ளது. இன்று (சனிக்கிழமை) ஒரே நாளில் 7,758 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,51,055 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் சிகிச்சையில் 52,723 பேர் உள்ளனர். வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிருந்து தமிழகம் வந்த 62 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பரிசோதனை விபரங்கள்...
தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) ஒரே நாளில் 64,315 மாதிரிகள் பரிசோதனைக்கு வந்தன. இதிலிருந்து 61,729 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. பரிசோதனைக்கு பின் 6,988 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் பரிசோதனைக்கு வந்த மொத்த மாதிரிகள் 22,87,334 ஆக உயர்ந்துள்ளது. பரிசோதித்தது 22,00,433 ஆகும். மேலும் மாநிலத்தின் கொரோனா பரிசோதனை மையங்கள் 115 ஆகவும் உயர்ந்துள்ளது.