சென்னை:
கேரளாவில் இடதுமுன்னணி அரசை சீர்குலைக்கும் வகையிம் அம்மாநில ஆளுநர் ஆரீப் முகமதுகான் செயல்பாடுகளுக்கு சிஐடியு அகில இந்திய மாநாட்டில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாநாட்டின் நிறைவு நாளில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
கேரளாவில் நிர்வாக நெருக்கடி ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ள பாஜக அரசு மேற்கொண்டு வரும் சதி திட்டங்களுக்கு சிஐடியு மாநாடு கண்டனம் தெரிவிப்பதுடன், மாநில அரசுகளை சீர்குலைக்கும் ஜனநாயக விரோதமான செயல்பாடுகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று மாநாடு கேட்டுக் கொள்கிறது.பாஜக அரசின் அரசியலலை கேரளாவில் செயல்படுத்துவதிலிருந்து அம்மாநில ஆளுநர் விலகி இருக்க வேண்டும் என்றும், ஆளுநருக்கு உள்ள அரசியல் சாசன கடமைகளை உயர்த்தி பிடிக்கவும், மாநில அரசின் நிர்வாகம் சமூகமாக நடைபெற அனுமதிக்க வேண்டுமென்றும் மாநாடு வலியுறுத்துவதாக அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியில் மாநில அரசால் இயன்றவரை மாற்றுக்கொள்கைகளை அமல்படுத்தி வரும் கேரளாவில் ஜனநாயக பூர்வமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடதுமுன்னணி அரசை பாதுகாக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள உழைப்பாளி வர்க்கம் குரல் எழுப்ப வேண்டும் என்றும் மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது.இந்த தீர்மானத்தை சிஐடியு அகில இந்திய செயலாளர் கே.சந்திரன்பிள்ளை முன்மொழிந்தார்.